நீரிழிவு (இனிப்பு நீர்) நோயை வெற்றிக்கொள்வோம்!

இனிவரும் தலைமுறைகள் அம்மி, அடிப்பம்பு, உலக்கை, குடக்கல் போன்றவற்றை மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதை உண்மைபடுத்தும் விதமாக, வாழ்வின் அன்றாட தேவைகளுக்கு எலக்ட்ரிகல் சாதனங்களையே நம்பி வாழ்கிறோம். இச்சாதனங்கள், நம்மை அறியாமலேயே உடல் உறுப்புகளுக்கு இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்த பயிற்சிகளை தடுத்து, பலவித நோய்களில்

அல்லல் பட காரணமாக அமைந்துவிட்டன. இன்றைய சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

ஆண்டின் இறப்பு விகிதத்தில் 5 சதவீதமானோர் நீரிழிவு நோயாளிகளாக இருக்கின்றனர். அதில் 80 சதவீதமானோர் குறைவான மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உள்ள 45லிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள்.
உலகிலேயே இந்தியாவில்தான் இந்நோய்க்கு ஆட்பட்டவர்கள் அதிகம். அதிரடியான தடுப்பு வழிகள் எடுக்கப்படாவிட்டால், நீரிழிவுநோயாளிகளின் இறப்பு விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகமாகும் என உலக சுகாதார மையம் (WHO – World Health Organization) எச்சரித்துள்ளது. இந்தியாவில் 2000-ல் 31.7 சதவீதம் இருந்த இந்நோய் 2030-ல் 79.4 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
                                        
நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகள்:
1) இந்தியா
2) சீனா
3) அமெரிக்கா
4) இந்தோனேசியா
5) ஜப்பான்
6) பாகிஸ்தான்
7) ரஷ்யா
8) பிரேஸில்
9) இத்தாலி
10) பங்களாதேஷ்
அதிகமான உடல் பருமன் கொண்டவர்களாலும் உடலுழைப்பு இல்லாதவர்களாலும் இந்நோய் அதிரடியாக அதிகரித்து வருகிறது. சில நாடுகளில் முன்னெப்போதும் காணாத அளவு, குழந்தைகளிடமும் வயதுவந்தவர்களிடமும் சுமார் பாதியளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு மட்டும் 1.1 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்துள்ளார்கள். நீரிழிவு நோயுடன் வாழ முடியும் என்றாலும் கூட அவர்களின் இறப்பு, இருதய மற்றும் சிறுநீரக நோய்களால் முந்திக்கொள்கிறது. எனவே அனைவரும் இந்நோய் பற்றிய அதிகப்படியான விஷயங்களை அறிந்துக் கொண்டு, “வருமுன் காப்பதும்” வந்தபின் தொய்ந்துப் போகாமல் எதிர்கொள்வதும் அவசியமாகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகமெடுத்தல், அதிக பசி, குறுகிய காலத்தில் எடை குறைதல், அதிகமாக சோர்வடைதல், கண்பார்வை மங்குதல், வெட்டு காயம் அல்லது சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல், திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் போன்றவை நீரிழிவு நோய்க்கு அறிகுறிகள். எனவே, தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியமாகும்.
இந்நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும்கூட, 40 வயதை தாண்டியவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள் மற்றும் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு அதிக வாய்ப்புண்டு. இதனால், பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு போன்றவை ஏற்படலாம்.
நீரிழிவு நோய் என்பது தீரா நோய் என்றாலும் கூட, முறையான மருந்து, கட்டுப்பாடான உணவு முறை, தினந்தோறும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி செய்வது மூலமாக இந்நோயை வெற்றிக்கொள்வோமாக.
உதவிக் குறிப்புகளுக்கு பயன்பட்ட தளங்கள்:1) www.who.int – உலக சுதாதார மையத்தின் இணையத்தளம்
2) ta.wikipedia.org – கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியா
Close