எளிமையாகிறது 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணிதப் பாடத்திற்கான வினாத் தாளில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சில மாற்றங்களைச் செய்துள்ளது. மாணவர் நலன் கருதி 10-ஆம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாளில் புத்தகத்தின் வெளியிலிருந்து கேட்கப்படும் கட்டாய வினாக்கள் பொது வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது

 என்றும் அரையாண்டுத் தேர்வு முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும்  தேர்வுத் துறை அனுப்பிய சுற்றறிக்கை:

கேள்வி: பிரிவு-அ  பகுதியில் இடம்பெறும் 15 வினாக்களும் பத்தாம் வகுப்பு கணிதப்பாட நூலின் ஒவ்வொரு அலகின் முடிவிலும் தொகுத்தளிக்கப்பட்டுள்ள வினாக்களிலிருந்து மட்டுமே கேட்கப்படுமா?

பதில்:  ஆம்.

கேள்வி: பிரிவு-ஆ மற்றும் பிரிவு -இ ஆகிய பகுதிகளில் முதல் 14 வினாக்களில், பாடப்புத்தகத்திற்கு வெளியிலிருந்து கேட்கப்படும் இரு வினாக்களும் அடங்கும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு கேட்கப்படும் இரு வினாக்களும் மெய்யெண்களின் தொடர் வரிசைகளும் தொடர்களும், இயற்கணிதம், ஆயத்தொலை வடிவியல் மற்றும் அளவியல் ஆகிய 4 பாடப்பகுதிகளிலிருந்து மட்டுமே கேட்கப்படுமா?

பதில்:  அவசியம் இல்லை. அனைத்துப் பாடப்பகுதியிலிருந்தும் கேட்கப்படலாம்.

கேள்வி: பிரிவு-ஆ மற்றும் பிரிவு-அ ஆகிய பகுதிகளில் இடம்பெறும் கட்டாய வினாக்கள் ( 30 a, b ; 45 a, b ) பாடநூலில் உள்ள வினாக்களிலிருந்து கேட்கப்படும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வினாக்கள் மெய்யெண்களின் தொடர் வரிசைகளும் தொடர்களும், இயற்கணிதம், ஆயத்தொலை வடிவியல் மற்றும் அளவியல் ஆகிய 4 பாடப்பகுதிகளிலிருந்து மட்டுமே கேட்கப்படுமா?

பதில்:  அவசியம் இல்லை. அனைத்துப் பாடப் பகுதியிலிருந்தும் கேட்கப்படலாம்.

கேள்வி: வினாத்தாளின் பிரிவு-ஆ, பிரிவு-இ மற்றும் பிரிவு-ஈ ஆகிய பகுதிகளில் கேட்கப்படும் எடுத்துக்காட்டு மற்றும் பயிற்சிக் கணக்குகளின் எண்ணிக்கையில் மாற்றம் உள்ளதா?

பதில்:  எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சிக் கணக்குகளின் எண்ணிக்கையில் எந்தவித நிபந்தனையின்றி எந்த எண்ணிக்கையிலும் கேட்கப்படலாம்.
கேள்வி: பிதாகரஸ் தேற்றத்தின் நிரூபணம் சில மாவட்டங்களில் நடைபெற்ற மாதிரித் தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பயிற்சிக் காலங்களின் போது சில மையங்களில் நிரூபணம் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, பிதாகரஸ் தேற்றத்தின் நிரூபணம் தேர்வுக்கு இடம் பெறக்கூடிய பகுதியில் உள்ளதா?    
பதில் :  ஆம்.

இந்த மாற்றம் குறித்து கேட்டதற்கு, “சென்ற ஆண்டு பாடப்புத்தகத்திற்கு வெளியே இருந்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால், பல மாணவர்களால் அதிக மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை. தற்போதைய மாற்றம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது” என்கிறார், வேலூர் மாவட்டம், புதுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் தணிகை வேல்.

Close