பித்து பிடித்த பேட்ஸ்மென்கள்: ஆஸி. ஊடகம் கடும் தாக்கு!

இந்தியாவிடம் 4- 0 என்று வரலாறு காணாத உதை வாங்கியுள்ள ஆஸ்ட்ரேலிய அணி வீரர்களின் வெந்த புண்ணில் அந்த நாட்டு ஊடகங்கள் வேலைப்பாய்ச்சியுள்ளது.

இன்னதுதான் என்று இல்லை… அவ்வளவு வசை…!

டெலிகிராப்: “34 ஆண்டுகளின் மிக மோசமான அணி. மைக்கேல் கிளார்க் அணி பயணம் முடிந்து ஒரு கிழிந்து போன பிம்பத்தை உள்நாட்டுக்கு எடுத்து வருகிறது.

ஹெரால்ட் சன்: “பித்து பிடித்த நிலையின் விளக்கம் என்னவெனில் செய்ததையே திரும்ப திரும்பச் செய்வது ஆனால் முடிவை மட்டும் வித்தியாசமாக எதிர்பார்ப்பது. ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்கள் மாறவில்லையெனில் ஆஷஸ் தொடருக்கு முன்பாக பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டியதுதான்”.

உண்மையான கவலை ஆஸ்ட்ரேலிய வீரர்கள் என்ன சராசரி வைத்துள்ளனர் என்பதல்ல. ஆனால் அவுட் ஆன விதம், ஷாட் தேர்வு என்று ஒட்டுமொத்த மனோ நிலையையே கேள்விக்குட்படுத்தவேண்டியுள்ளது. என்கிறது ஹெரால்ட் சன்.

கடைசி டெஸ்டில் கேப்டன்சி செய்த ஷேன் வாட்சன் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

ஒரு பேட்ஸ்மெனின் திறமையை தடயவியல் நிபுணர் கோன்டு ஆராய வேண்டியுள்ளது. அது ஷேன் வாட்சனின் ஆட்டம்தான். மைக்கேல் கிளார்க்குடன் நல்ல பேட்ஸ்மெனாக இந்தியாவுக்கு வந்தார். ஆனால் அவரைத் தவிர எல்லோரும் அரைசதம் அடித்துள்ளனர். பீட்டர் சிடில் இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம், மிட்செல் ஸ்டார்க் 99 ரன்கள் எடுக்க ஷேன் வாட்சனின் சராசரி நேதன் லயனை விடவும் மோசமாக உள்ளது என்று தாக்கியுள்ளது டெலிகிராப்.

சிட்னி மார்னிங் ஹெரால்டும் வாட்சனை உப்புக் கண்டம் போட்டது. டெல்லி டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் வாட்சனின் ஷாட் தேர்வு அதிர்ச்சியளிப்பதாகும். இந்த தொடரில் இரண்டாவது அதிகபட்ச ஆஸ்ட்ரேலிய தனிநபர் ஸ்கோர் 99 அடித்தது டெய்ல் என்டர் மிட்செல் ஸ்டார்க், இந்தியாவில் போய் அவுட் ஆவது குற்றமல்ல, ஆனால் திரும்பத் திரும்ப ஒரேவிதமாக அவுட் ஆவதுதான் பிரச்சனை என்று ஹெரால்ட் சன் மேலும் போட்டுத் தாக்கியுள்ளது.

இந்தத் தொடர் முழுதும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி ஆட்டமிழந்த முதல் வரிசை வீரர்களின் ஆட்டம் படு மோசம். பொறுப்பற்ற அதிரடி ஆட்டம்! தோல்வியில் முடிந்த ஷாட் தேர்வு.. என்று மேலும் பின்னி எடுத்துள்ளது ஹெரால்ட் சன்.

டெலிகிராப் மேலும் ஒரு படி மேலே போய், “அன்றைய டெல்லி டெஸ்ட் தோல்வி தினத்தில் நடந்த படுகொலையை சிட்னியில் உட்காந்து பார்த்துக் கொண்டிருந்த கிளார்க் என்ன நினைத்திருப்பார் ஆஷஸ் தொடருக்குள் இந்த அணியை எப்படி மறு கட்டுமானம் செய்வது என்று நினைத்திருப்பாராம். இவ்வாறு தாக்கியுள்ளது ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள்.

Close