பிரபாகர‌ன் மக‌ன் பாலசந்திரன் கொலை: பொன்சேகா புது விளக்கம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை சுட்டுக் கொன்றது இலங்கை ராணுவம் அல்ல என்று கூறியுள்ளா‌ர் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா.

பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்படும் முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படத்தில் ராணுவ வீரர் ஒருவர்
சீருடையில் இருப்பதுபோன்று காட்டப்பட்டுள்ளது. அது இலங்கை ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சீருடை அல்ல. இந்திய ராணுவத்தினர் அணிவது போன்று உள்ளது. விடுதலைப் புலிகள்தான் இறுதிக் கட்ட போரின்போது இந்திய ராணுவ வீரர்கள் போல் உடையணிந்திருந்தனர்.

பதுங்கு குழி ஒன்றில் பாலசந்திரன் அமர்ந்து இருப்பதுபோல புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தினரிடம் அதுபோன்ற சுத்தமான பதுங்கு குழிகள் கிடையாது. அது விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியாகத்தான் இருக்க வேண்டும். எனவே பாலசந்திரன் கடைசி கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருடன்தான் இருந்துள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காட்டப்படும் புகைப்படம் மாற்றம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் பொன்சேகா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்கு தலைமை வகித்த தளபதி என்ற முறையில் எந்தவிதமான சர்வதேச விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். போரில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள மக்கள் விரும்புகிறார்கள். பலர் தங்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ள விரும்புகின்றனர். போர் நிகழ்வுகள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிடவில்லை என்றால் மேலும் பல சர்வதேச குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு எதிர்கொள்ள நேரிடும் என்றும் பொன்சேகா கூறியுள்ளார். 

Close