மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்?

மறைக்கப்பட்ட உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். அன்றைய நாள் உண்மையான பயங்கரவாதிகளும், பயங்கரவாதமும் இணைத்து நசுக்கப்படும். உண்மை நீண்ட நாள் உறங்காது; இறுதியில் சத்தியமே வெல்லும்; நீதி நிலைபெறும்!
இந்திய

நாட்டின் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே காவி பயங்கரவாதம் குறித்து பேசியதும், அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டதும், நாட்டை நையப் புடைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை விட்டு விட்டு பாஜகவினர் சுஷில் குமார் ஷிண்டே காவி பயங்கரவாதம் குறித்த தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்டால் தான் நாடாளுமன்றத்தை இயங்க விடுவோம் என்று பாஜகவினர் நாடாளுமன்றத்தை நிறுத்தியதும், அதற்கு வேறு வழியில்லாமல் ஆதாரத்தோடு வைத்த குற்றச்சாற்று என்ற இறுமாப்பு கூட இல்லாமல் ஷிண்டே நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததும், சமீபத்தில் அலகாபாத் கும்பமேளா மாநாட்டுக்குப் பிறகு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்ற அறைகூவலும், அதே கும்பமேளாவில் சாதுக்கள் மாநாட்டில் விஷ்வ ஹிந்து பரிஷத் மீண்டும் அயோத்தி ராமர் கோவில் பிரச்சனைக்காக யாத்திரை நடத்துவோம் என்று அறிவித்ததும், அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நேரத்தில் பாஜக மட்டும் ஊழல் பிரச்சனை, எல்லை பிரச்சனை, கூட்டணியைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தனது ராமர் கோவில் லாபி, காவி பயங்கரவாதம் என்பதற்கான எதிர்ப்பு ஆகியவற்றின் மேல் கவனம் செலுத்தும் நேரத்தில் ஹைதராபாத்தில் திடீரென தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு 2 நாள் முன்பு உளவுத்துறைக்கு வந்த ரகசியத் தகவலின் மூலம் எதுவும் செய்ய முடியாத மத்திய மாநில அரசுகள், குண்டுவெடிப்பு முடிந்து 24 மணிநேரத்தில் யார் என்று கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்வது நமக்கு கட்டாயம் ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்துகின்றது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சில மறைக்கப்பட்ட அல்லது நாம் மறந்து விட்ட உண்மைகளை இந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டியது நமது கடமையாகக் கருதுகிறோம்.

26/11 மும்பையில் அப்பாவிகளை கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காக்கும் காவல் பணியில் ஈடுப்படும் போது தன் உயிரை இந்தியாவிற்காக தந்த மராத்திய மாவீரன் ஹேமந்த் கார்கரே.

மாலேகான் குண்டுவெடிப்பில் இந்த தேசத்தின் மிகப்பழமையான ஒரு பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அம்பலப்படுத்திய மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப்படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே, காமா மருத்துவமனைக்கு வேண்டுமென்றே வரவழைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுகிறார். அவரைப்போன்று இரண்டு துணிச்சலான காவல்துறை உயர் அதிகாரிகளும் இதே நாளில் வேறு வேறு இடங்களில் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.

ஹேமந்த் கர்கரே அணிந்து இருந்த குண்டு துளைக்காத சட்டையை சம்பவம் நிகழும் போது அவர் அணிந்துதான் இருந்தார். இருப்பினும் அவர் மார்பில் குண்டு பாய்ந்து அவர் உயிர் போனது எப்படி? அந்த குண்டு துளைக்காத சட்டை எங்கே? தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இந்த வினாவினை எழுப்பிய போது கிடைத்த பதில் என்ன? இது போன்ற ஏராளமான விடை தெரியாத கேள்விகளுக்கு தீர்வு எப்போது? அவை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதன் பின்னணியில் ஓர் அப்பட்டமான அரசியல் சதி காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கலந்த கவலை இந்திய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது.

குறிப்பாக மும்பை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.

மாவீரன் கர்கரேயின் மரணம் குறித்து இந்தியாவே அதிர்ச்சியில் ஆழ்ந்த போது சில சக்திகள் மட்டும் குதூகலத்துடன் கும்மாளமிட்டன. மாலேகான் குண்டுவெடிப்பு சதி குறித்த உண்மைகள் இனி வெளிவருமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழத் தொடங்கியது.

இந்நிலையில் கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்த மர்மங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சுதந்திர உணர்வுள்ள புலனாய்வு நிபுணர்கள் மத்தியிலும் எழத் தொடங்கியது.

கர்கரேயின் மரணம் குறித்த மர்மம் நீடிக்கும் நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் அமைச்சருமான அப்துல் ரஹ்மான் அந்துலே நாடு தழுவிய நியாயமான சந்தேகத்தை சதிகாரர்கள் உள்ளம் அதிர உரத்து முழங்கினார்.

“கர்கரேயின் படுகொலையில் சந்தேகம் இருக்கிறது, கர்கரேயைக் கொன்றது யார்? ஹிந்துத்துவ தீவிரவாதத்தை நேர்மையுடன் வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய அந்த நேர்மையான அதிகாரியை காமா மருத்துவமனைக்கு செல்லுமாறு தவறாக வழிநடத்தியது யார்? பயங்கரவாதிகள் குண்டு மழை பொழிந்த தாஜ் ஹோட்டலுக்கோ, டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கோ, நரிமன் இல்லத்திற்கோ செல்லவிடாமல் காமா மருத்துவமனைக்கு செல்வதற்கு அவரை தவறாக தகவல் கூறி வழிநடத்தியது யார்?” என்ற அதிரடி வினாக்களை வீசி நாடாளுமன்ற அவையினைத் திணறடித்தார்.

கர்கரே மிகச்சிறந்த நேர்மையான அதிகாரி. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது, கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என அந்துலே தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்துல் ரஹ்மான் அந்துலேயின் உரைக்கு கடும் இடையுறு விளைவித்தனர். இது அந்துலேயின் பாகிஸ்தானுக்கு சாதகமான வாதம் எனக்கூறும் அளவுக்கு தங்கள் நிலையை தாங்களே தாழ்த்திக் கொண்டனர்.

ஒரு நேர்மையான நெஞ்சுரம் மிக்க ஓர் அதிகாரியை இந்த தேசம் இழந்துவிட்டதே என்ற வேதனை கொஞ்சமும் இல்லாத பாஜகவினரின் வெற்றுக்கூச்சல் இந்திய மக்களின் மத்தியில் அவர்களுக்கு இழிவைத் தேடித்தந்தது.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் படுகொலை செய்யப்பட்ட கர்கரேயின் விஷயத்தில் மகாராஷ்டிர அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை எனத் தெரிகிறது. கர்கரே படுகொலை குறித்து தனியாக விசாரணை ஏதும் செய்யப்பட்ட மாட்டாது என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் வர்த்தக தலைநகரத்தில் ஏற்பட்ட தாக்குதல் குறித்த தகவல் தெரிந்த உடனேயே உயிரை துச்சமென நினைத்து சிங்கமென பாய்ந்து சென்ற ஒரு கடமை வீரன் குண்டு துளைக்காத சட்டை அணிந்தும் கூட மார்பில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். காமா மருத்துவமனைக்கு காரில் கடத்திச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது.

கர்கரேயை படுகொலை செய்த பயங்கரவாதிகள் அம்பலப்படுத்தப்படுவது எப்போது என்பது தான் மக்கள் மனதில் உள்ள கேள்வி. ஒவ்வொரு பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும் போதும் இது குறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும் மோடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை மோடி மீது விசாரணைக் கணைகள் பாயாமல் இருப்பது ஏன்? மோடியை விசாரணைக்கு உட்படுத்துவதில் என்ன பிரச்சினை?

தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே சங்பரிவார் அமைப்பினரால் தனக்கு மிரட்டல்கள் வந்ததையும், அவர்கள் தன்னை தவறாக சித்தரித்ததையும் குறித்து வேதனை தெரிவித்த கர்கரே, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து பிரதமரிடமோ, உள்துறையிடமோ கர்கரே கடிதம் மூலம் ஏதேனும் தெரிவித்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.

பயங்கரவாதிகள் போர்பந்தரில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்றால், இதற்கு குஜராத் அரசின் கையாலாகத்தனம் தான் முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஆனால் இது குறித்து மோடி அரசை விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? இது குறித்து யாரும் வாய் திறக்கவில்லையே ஏன்?

இவ்வளவு ஆயுதங்களுடன் சதிகாரர்கள் ஊடுருவ முடிந்தது என்றால் பாஜகவுக்கு நெருக்கடியான சூழ்நிலையில் குண்டுகள் வெடிக்கின்றன. இவ்வாறு கூறியவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய்சிங். இது குறித்து எந்த புலனாய்வு அமைப்பும் ஊடகங்களும் வாய்திறக்கவில்லையே ஏன்?

தீவிரவாதிகள் பஞ்சாபி மொழி பேசியதாக முதலில் ஊடகங்கள் குறிப்பிட்டன. உருதுமொழி பேசியதாகக் கூட பல ஊடகங்கள் குறிப்பிட்டன. மராத்திய மொழியில் பேசியதாக மராட்டிய டைம்ஸ் குறிப்பிட்டது. அவ்வாறெனில், அவர்கள் யார்? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

மோடி, ஓபராய் ஹோட்டலுக்குச் சென்று பார்வையிடுவது போல சென்றதை பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டை நடத்திய கமாண்டோ படையினர் கோபத்துடன் குறிப்பிட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டிய லிஸ்ட்டில் உள்ள மோடி எந்த பயமும் இல்லாமல் நாடகமாடியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றதோடு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெறும் பத்து பேர் தான் இந்த பயங்கரவாதத்திற்கு காரணம் என்பதை நம்ப முடியவில்லை. பல்வேறு முரண்பாடான தகவல்கள் ஏற்கனவே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. 

இதுவரை நடைபெற்று வந்த பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த வழக்குகளில் மர்மமான ஒரு போக்கை இதுவரை இந்நாடு பார்த்திருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் யாரையாவது கைது செய்வது பின்னர் அது குறித்த எந்த ஆதாரப்பூர்வ தகவல்களும் வெளிவராமல் மர்மத்தை பாதுகாத்துக் கொண்டே இருப்பது என்ற நிலை தான் இருக்கும். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் போக்கு அவ்வாறு இருக்கவில்லை. முறையாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு பின்னர் அவை ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்களாக மாறிய பின்னரே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது.

FILE

ராணுவத்தில் பணியாற்றிய கர்னல் புரோஹித்தை விசாரிக்கத் தொடங்கி பல வாரங்களாயின. ஆனால் அவர் வீட்டில் இதுவரை சோதனை போட தீவிரவாத தடுப்புப் படை செல்லவேயில்லை. வீட்டுக்கு செல்லாமலே தீவிரவாத தடுப்புப் படையினருக்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.

தெளிவாக சதிகாரர்களை அடையாளம் காட்டும் வழக்கிலேயே இவ்வளவு சுனக்கத்துடன் செயல்பட்ட போது, இதுவரை நிகழ்ந்த அசம்பாவிதங்களில் முதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வீட்டைத்தான் முதலில் தட்டுவார்கள். அப்புறம் ஆளை தட்டுவார்கள். சரியான ஆளை தப்பிக்கவிட்டு தப்புத் தப்பாக எல்லாமே செய்வார்கள். தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் விதம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. இந்நிலையில் உள்நாட்டு தீவிரவாதம் வெளிநாட்டு பயங்கரவாதம் என வகையாய் பிரச்சாரம் செய்வது மட்டும் போதாது. இந்திய மக்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் உறுதி காட்ட வேண்டும்.

நாட்டில் எத்தனையோ விசாரணைகள் குறித்து கவலைப்படாத பாஜக தலைவர் அத்வானி, பெண் சாமியார் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி மிகப்பெரிய அழுகுணி ஆட்டமே ஆடினார். இதற்காக நாம் அத்வானியைக் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அதற்கு பணிந்து நடந்த மன்மோகன்சிங் மீது தான் நமது ஆதங்கம் அதிகரிக்கிறது.

அத்வானி போன்றவர்களின் அதீத ஆர்வம் மாலேகான் வழக்கின் கதி இனி என்ன ஆகும் என்ற கேள்வியையும், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள் தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இதுவும் நாட்டு மக்கள் ஏராளமானவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

இந்நிலையில் மும்பை, பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய அதிர்ச்சி செயல் நம் மனதை வெகுகாலம் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கக்கூடும். வெளிநாட்டு தீவிரவாதமோ, உள்நாட்டுத் தீவிரவாதமோ எதுவாக இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. இந்நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வரை ராணுவத்திற்கென செலவழிக்கப்படுகிறது. காவல்துறைக்கும் கோடி கோடியாக கொட்டப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடும் போது 10 மணி நேரம் கழித்தே நடவடிக்கையில் இறங்கும் அவல நிலையே நாம் காணும் காட்சியாக இருக்கிறது.

ராணுவத்திலாகட்டும், என்.எஸ்.ஜி. என்ற தேசிய கமாண்டோ படையிலும் மற்றும் பல பாதுகாப்பு படைகளிலும், ரா உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் அனைத்துத் தரப்பு மக்களை அதிக அளவு சேர்க்க வேண்டும். அரசுகள் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட விதம் பரிதாபத்தை வரவழைத்தது.

பயங்கரவாதம் குறித்து பயங்கரமாக கட்டுக்கதைகள் பரப்பும் சக்திகளையும், தாங்களே சதிகளை செய்து அப்பாவிகள் மீது பழிபோடும் பயங்கரவாத சதிக் கும்பலையும், வெளிநாட்டு சதி என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவர்களையும் சாதாரண மக்கள் இனங்கண்டு அவர்களை சமூகத் தளத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.

மறைக்கப்பட்ட உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். அன்றைய நாள் உண்மயான பயங்கரவாதிகளும் பயங்கரவாதமும் இணைத்து நசுக்கப்படும். உண்மை நீண்ட நாள் உறங்காது; இறுதியில் சத்தியமே வெல்லும்; நீதி நிலைபெறும்!

                                                                                                                                             by reference webdunia.com
Close