சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு.. போலீஸ் பூத்துகள் உடைப்பு!

இஸ்லாமியரை புண்படுத்தும் வகையிலான திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து எடுத்த திரைப்படத்துக்கு உலகம் முழுவதும் இஸ்லாமியர் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும், இந்திய தவுகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதைத் தொடர்ந்து தடையை மீறி இரண்டு அமைப்புகளும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. இரண்டு அமைப்பினரும் அண்ணா சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியில் அமைதியாக நின்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வன்முறை வெடித்தது. அமெரிக்க தூதரகம் மீது சராசரியாக கற்கள் வீசப்பட்டுள்ளன.
தூதரகத்தை சுற்றி 4 நவீன வசதியுடன் கூடிய போலீஸ் பூத்துகள் இருந்தன. தாக்குதல் நடத்தியவர்கள் அவற்றை பெரிய கற்களை போட்டு தாக்கி அடித்து நொறுக்கி விட்டனர். சூரிய வெப்பத்தால் செயல்பட்ட போலீஸ்பூத் ஒன்றை தலை கீழாக தூக்கிப்போட்டனர். தூதரகத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த அனைத்து உயரக நவீன கண்காணிப்பு கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அமெரிக்க கொடியும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.
Close