தினம் 01 ஹதிஸ்

பாங்கு சத்தம் கேட்டாச்சா!

 பள்ளிவாசலில் தொழுகைக்கு பாங்கு சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள். இந்த பாங்கு அளவிடற்கரிய மகிமை உடையது. அதுபற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.


* கியாமநாளில் மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கும் சமயத்தில், பள்ளிவாசலில் பாங்கு 
சொல்லுகின்ற முஅத்தின்கள் கஸ்தூரி மணம் கமழும் மேடைகளில் உட்கார்ந்திருப்பார்கள். இன்னும் அவர்களுக்கு எந்த ஒரு அச்சமும் துன்பமும் நிகழாது.
* பாங்கொலி கேட்டு எவர் பேசுகின்றாரோ, அவருக்கு மரணவேளையில் கலிமா நாவில் வர தடையாக இருக்கும்.
* பாங்கு சொல்லும் சப்தத்தை நீங்கள் கேட்டால், முஅத்தின் சொல்வதைப் போல பதில் சொல்லுங்கள்.
* பெண்களே! நீங்கள் பாங்கு சொல்லும் சப்தத்தைக் காதில் கேட்டால், பாங்கு சொல்பவர் போல் நீங்களும் சொல்லுங்கள். உங்களுக்கும் அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்துலட்சம் தரஜா உண்டு. ஆண்களுக்கு இருமடங்கு நன்மை கிடைக்கும்.
* பாங்கு, முன்அணி (ஜமாஅத் தொழுகையின் முதல் அணி) இவ்விரண்டின் நன்மைகளை மக்கள் அறியமாட்டார்கள். ஆனால், அதை அவர்கள் தெரிந்து கொள்வார்களேயானால், அந்த நன்மைகளைப் பெறுவதற்காக தங்களுக்குள் சீட்டுக் குலுக்கி முன்அணி வர எத்தனிப்பர். தவிர, தொழுகையின் நன்மைகளும் தெரிந்து விடுமாயின் பெரும் முயற்சியோடு இறைஇல்லம் விரைந்து வந்து விடுவார்கள்.
* பாங்கு சொல்பவரின் குரல் கேட்கிற தூரத்தில் இருக்கின்ற ஜின்னும் மனிதனும் கியாமநாளில் அவருக்காக நிச்சயம் சாட்சி சொல்வார்கள்.
* பாங்கு சொல்பவர் கியாமநாளில் கழுத்து அதிகம் நீண்டவர்களாக இருப்பார்.
* நன்மை வேண்டியவராக, அல்லாஹ்விற்காக என்று ஏழுவருடம் பாங்கு சொல்பவருக்கு நரக விடுதலை எழுதப்படுகிறது.
* பாங்கு சொல்பவரும், தல்பியா சொல்பவரும் மண்ணறைகளில் இருந்து வெளியேறும் போது, பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லிக் கொண்டும், தல்பியா சொல்பவர் தல்பியா சொல்லிக்கொண்டும் வருவார்கள்.
* பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் வேண்டும் துஆ பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை.
* ஒருவர் 12 ஆண்டுகள் பாங்கு சொன்னால், அவருக்கு சுவர்க்கம் நிச்சயம் உண்டு. அவர் பாங்கு சொன்னதினால் அவருக்கு ஒவ்வொரு தினமும் அறுபது நன்மைகள் பதிவு செய்யப்படுகிறது.
* தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக்கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்று விட்டவனாக 
ஓடுகிறான். பாங்கு கூறி முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொன்னதும் ஓடுகிறான். பாங்கு சொன்னதும் ஓடுகிறான். இகாமத் கூறி முடிந்ததும் முன்னே வருகின்றான். தொழுகின்றவரிடம் நீ இதுவரை எண்ணத்தையெல்லாம் எண்ணிப்பார் என்று கூறுவான். முடிவில் தொழுதவர் தான் எத்தனை ரக்அத்துகள் தொழுதோம் என்பதை அறியாதவராகி விடுவார்.
இனிமேல், பாங்கு சொல்லும்போது அமைதிகாத்து, நீங்களும் திரும்பச் சொல்லுங்கள். நன்மை அடையுங்கள்.

Close