12 மணி நேரம் மின் தடை

சென்னை: காற்றாலை, புனல், அனல் மின்சார உற்பத்தி பாதிப்பு மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைந்ததால், தமிழகத்தின் மொத்த மின் தேவையில், 30 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை இல்லாத அளவாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், 12
மணி நேரம் வரை மின்வெட்டு அமலாகியுள்ளது. மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்ததால், தி.மு.க., ஆட்சியில் (2008ம் ஆண்டு) தொழிற்சாலைகளுக்கு, வாரம் ஒரு நாள், மின் விடுமுறை அளிக்கப்பட்டது. மின் விடுமுறை மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தை, வீட்டு இணைப்புகளுக்கு வழங்கி, அப்போதைக்கு நிலைமை சமாளிக்கப்பட்டது.


இரு மடங்கு:

மின் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்ததால், சென்னை தவிர பிற பகுதிகளில், நாள் தோறும், ஐந்து மணி நேரம், அறிவிக்கப்பட்ட மின் தடை நடைமுறைக்கு வந்தது. தற்போது, மின் தடை நேரம் இரு மடங்குக்கு மேலாக அதிகரித்து, 12 மணி நேரமாக மாறியுள்ளது. தமிழகத்தின் தற்போதைய உச்சபட்ட மின் தேவை, 11 ஆயிரத்து 500 மெகாவாட்; தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் குறைந்ததால், தற்போது காற்றாலைகளிலும் பருவமழை பொய்த்ததால், நீர் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், இரு வாரத்துக்கு முன் மின் பற்றாக்குறை, 2,500 மெகாவாட் ஆக அதிகரித்தது. பற்றாக்குறையை சமாளிக்க, இரு வாரங்களாக, தமிழகத்தில் தினமும், ஐந்து முதல், ஏழு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கும் மின்சாரத்தில், 1,072 மெகாவாட் மின்சாரத்தைக் குறைத்து விட்டதால், இரண்டு நாட்களாக மின் பற்றாக்குறை, 3,500 முதல், 4,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மொத்த மின் தேவையில், 30 சதவீதம் பற்றாக்குறைஏற்பட்டதால், இரு நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக, பகலில் ஐந்து முதல், ஆறு மணி நேரம், இரவில், ஒன்றரை மணி நேரத்துக்கு, ஒரு முறை என்ற அளவில், ஐந்து முதல் ஆறு மணி நேரம் என, மொத்தம், 10 முதல், 12 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் மின் தடை நேரம் இரட்டிப்பு ஆகியுள்ளது, மக்களை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

முதல்வர் ஆலோசனை:
இதற்கிடையே, புதிய மின் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு மின் வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்டம் வல்லூரில் மேற்கொண்டு வரும், 500 மெகாவாட் திறன் கொண்ட, வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்று அலகுகள், 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டத்தின் இரண்டு அலகுகள் என, 1,700 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும், பொதுவான மின் நிலைமை குறித்தும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் விவாதித்தார். புதிய மின் திட்டங்களை, விரைந்து மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மின் வாரிய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

12 மணி நேர அவஸ்தை:
கடும் மின் வெட்டால் நாள்தோறும் பகல், இரவு என 12 மணி நேரம் மக்கள் அவஸ்தையை அனுபவிக்கின்றனர். புழுக்கத்தாலும் கொசுக்கடியாலும் இரவில் தூக்கம் கெடுகிறது. மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. பெண்கள் சமையல் செய்வதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. விவசாயப்பணிகளும் முடக்கப்பட்டுள்ளன. 

Close