ஆச்சரியப்படாதீங்க… நமது திருச்சி விமான நிலையத்தின் எதிர்கால புகைப்படங்கள்…!

அற்புதமான வடிவமைப்பில் வர இருக்கும் புதிய ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய பயணிகள் முனையக் கட்டிடம்.

அதிகரித்துவரும் விமான பயணிகள் எண்ணிக்கையால் தற்போதுள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய பயணிகள் முனையக் கட்டிடமானது பயணிகளைக் கையாளுவதில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக இரவில் தொடர்ந்து எட்டு பன்னாட்டு விமானசேவைகள் இருப்பதால் பயணிகளுக்கு கடும் வசதிக்குறைவுகள் ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு விமானநிலையங்கள் ஆணைக்குழுமமாது கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய பயணிகள் முனையக் கட்டிடம் கட்டுவதற்கு முயற்சிகள் எடுத்தது. இதற்காக உலக அளவில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளில் Egis என்ற பிரெஞ்சு நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த ஜுலையிலேயே Egis பிரெஞ்சு நிறுவனமும் பணிகளைத் தொடங்கியது. முக்கியமாக “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்” தடையில்லா சான்று முதற்படியாக பெறப்பட்டது. அதனையடுத்து பயணிகள் முனைய வடிவமைப்பு (Design) வரைபடம் பெறப்பட்டது. இந்த வடிவமைப்பை திருச்சிரிப்பள்ளிக்கு வடிவமைத்துக் கொடுத்தது உலக அளவில் விமானநிலையங்கள் வடிவமைப்பிற்கு என்றே புகழ்பெற்ற லண்டனைச் சேர்ந்த “பாஸ்கல் வாட்சன்” என்ற நிறுவனமாகும்.

இந்த நிறுவனமானது, லண்டனின் அனைத்து விமானநிலையங்களையும் (ஹீத்ரு, காத்விக், ஸ்டான்ஸ்டெட் மற்றும் லூட்டன்), இங்கிலாந்தின் மற்ற விமானநிலையங்களான மான்செஸ்டர், பர்மிங்க்ஹாம் விமானநிலையங்கள், அயர்லாந்தின் டப்ளின் விமானநிலையம், கென்யாவின் ஜோமோ கென்யாட்டா-நைரோபி விமானநிலையம், இத்தாலியின் புளூமிசினோ-ரோம், மார்கோ போலோ-வெனிஸ், புளோரன்ஸ், நேப்பிள்ஸ், லியோன், மார்க்கோனி-போலோக்னா விமானநிலையங்கள், சீனாவின் பீஜிங்க்கு மாற்றான பீஜிங் தக்ஷிங், ஜோஸுயுஜி-டாலியன், ஜின்ஜியாங் விமாநிலையங்கள், சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஜீஜ்-ஜித்தா விமானநிலையம், அபுதாபியின் புதிய பயணிகள் முனைய விரிவாக்கம், கத்தரின் ஹமத் விமானநிலைய விரிவாக்கம், பிரான்ஸின் கோட் டி அஜுர்-நைஸ் விமானநிலையம்,

கம்போடியாவின் ஸியாம் ரீப் (உலக அளவில் அதிகம்பேர் இரசித்த வடிவமைப்பு) போன்ற முக்கிய விமானநிலையங்களை வடிவமைத்துள்ளது.

இந்த பாஸ்கல் வாட்சன் நிறுவனமானது ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய பயணிகள் முனையக் கட்டிடத்திற்கான வடிவமைப்பை நிறைவு செய்து அதற்கு மத்திய பயணிகள் விமானப் பொக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை ஏற்கனவே பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கட்டிடமானது சுமார் 0.65 மில்லியன் சதுர அடிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சதுரஅடியும் இரசித்து வடிவமைத்துள்ளது இந்த பாஸ்கல் வாட்சன் நிறுவனம்.

ஒட்டுமொத்த வடிமவைப்பு,

வெளி மேற்கூரை அலங்காரங்கள்,

கூரை அலங்காரங்கள்,

உள் அலங்காரங்கள்,

வெளி அலங்காரங்கள்,

சுவர்கள்,

தூண்கள்,

அலங்கார வண்ணக்கலவைகள்,

தோட்டங்கள்,

புல்வெளிகள் மற்றும் இதர பகுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், சமூக நல்லிணக்கம் மற்றும் கட்டிடக்கலைகளை பிரதிபலிக்கும் மற்றும் நினைவூட்டும் வகையில் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் வரக்கூடிய புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையமானது சுற்றுச்சூழல் ஒத்திசைவு பயணிகள் முனையமாகும். “ஒருங்கிணைந்த பசுமையான இயற்கை வாழ்விடக் குறியீடு-4 (Green Rating for Integrated Habitat, GRIHA-4)” என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மத்தியஅரசின் “புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சகத்தின் (Ministry of New and Renewable Energy) கீழ் வரும், டெல்லியில் உள்ள TERI (எரிசக்தி மற்றும் எரிசக்தி வளங்கள் கல்வி நிறுவனம் – The Energy and Resources Institute) கல்வி நிறுவனத்தால் கண்டறியப்பட்ட இயற்கை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டதே இந்த GRIHA மற்றும் அதன் படிநிலைகளாகும் (Grade).

இதன் அடிப்படையில் கிட்டத்தட்ட வரக்கூடிய புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையமானது தனது எரிசக்தி தேவையில் முற்றாக சுயசார்பு பெறும் வகையிலும் அது சூழியலை (Ecology System) பாதிக்காத வகையில் சூரியஒளித் தகடுகளைப் பயன்படுத்தி தனக்குத்தேவையான எரிசக்தியை தானாகவே தயாரித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது சிறப்பம்சமாகும். இந்தத்திட்டத்தை (சூரிய ஒளித்தகடு -Photovolatile) ஏற்கவே விமானநிலைய முன்னாள் இயக்குனர் நெகி அவர்கள் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் பாரத மிகுமின் நிறுவனம் போல் “மாகா ரத்னா” பெருமை பெற்றிருக்கவேண்டிய நிறுவனமானது இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமம். இடையில் தனியார் விமானநிறுவனங்களின் ஆதிக்கத்தால் “மினி ரத்னா” பெருமையையே பெற்றுள்ளது. தனது பெருமைகளை மீட்டெடுக்கும் விதமாக புதிய உத்வேகத்துடன் இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமம் செயல்பட்டு வருகிறது. இதன் முயற்சியாக, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம், சௌத்தரி சரண்சிங்-லக்னௌ பன்னாட்டு விமானநிலையங்களை தனியார் விமானநிலையங்களின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக்கு சவால் விடும் வகையில் முன்னுதாரணமாக எடுத்து முயற்சித்து வெற்றிபெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதில் புதிய தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பில் முதலாவதாக கட்டி முடிக்கப்பட உள்ள விமானநிலையமானது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை முன்னுதாரணமாக (Model) வைத்தே, இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமம் மற்ற விமானநிலையங்களை வடிவமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Close