Adirai pirai
articles posts உள்ளூர் செய்திகள்

அதிரையில் ஏ.டி.எம்-களில் பணம் எடுத்து தருவதாக மோசடி செய்யும் கும்பல்… பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடந்த 18-12-2017 அன்று அதிரையை சேர்ந்த நபர் (லேசாக கண்பார்வை பாதிக்கப்பட்டவர்)  ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா (BOI) ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் பணம் எடுத்துத்தருவதாக கூறி அவரது ஏ.டி.எம் கார்டையும் ரகசிய எண்ணையும் கேட்டு பெற்றுள்ளார். இதையடுத்து கணக்கில் பணம் இல்லை எனக்கூறி அந்த நபரிடம் இளைஞர் ஏ.டி.எம் கார்டை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அக்கவுண்ட் புக், ஏ.டி.எம் ஆகியவற்றுடன் ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அதனை வாங்கிப்பார்த்த வங்கி ஊழியர்கள், வேறு ஏ.டி.எம் கார்டை வைத்திருப்பதாகவும், கணக்கில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து வங்கியில் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்நிலையத்தில் இவர் புகாரளித்தபோது அவர்கள் வங்கியில் புகாரளித்துவிட்டு வருமாறு கூறியுள்ளனர். இது குறித்து வங்கியில் புகாரளிக்க சென்றால் அவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்ததற்கான FIR நகலை கேட்டுள்ளனர். இதனால் அவர் செய்வதறியாது குழம்பியுள்ளார்.

இதே போல் இன்று (27-12-2017) அதிரை போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த பெண் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அவரிடம் அங்கிருந்து பெண் ஒருவர் பணம் எடுத்துத்தருவதாக கூறி ஏ.டி.எம் கார்டையும் ரகசிய எண்ணையும் கேட்டு பெற்றுள்ளார். இதையடுத்து 10 ஆயிரக் ரூபாய் பணம் எடுத்து கொடுத்துள்ளார். அந்த தனது கணக்கில் இருந்த மொத்த பணத்தை எடுத்துக்கேட்டதற்கு 10 ரூபாய் மட்டுமே வருவதாக கூறி ஏடிஎம் கார்டை ஒப்படைத்துள்லார். ஆனால் அவருடைய செல்போன் எண்ணுக்கு பணம் எடுக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து SMS வந்துள்ளது. இதையடுத்து தன்னிடம் எந்த பெண் கொடுத்த ATM கார்டை பார்த்ததில் அதில் வேறு ஒருவரின் பெயர் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதிரையில் அடுத்த சில நாட்களில் நடந்துள்ள ஒரே மாதிரியான மோசடி சம்பவத்தை அலசி பார்க்கையில் இதற்காகவே ஒரே கும்பல் ஊரில் முகாமிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி மோசடி கும்பலை பிடிக்க வேண்டும். அதே போல் பொதுமக்களும் முன்பின் தெரியாத அந்நியர்களிடம் ஏ.டி.எம் கார்டையும் பாஸ்வேர்டையும் வழங்காமல் சுதாரிப்புடன் இருக்க வேண்டும்.