Adirai pirai
posts

இளம் விஞ்ஞானி மாஷா நஸீம்!(ஒரு சிறப்பு பார்வை)

இளம் விஞ்ஞானி மாஷா நஸீம் அமெரிக்காவிற்கு செல்ல இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு விஞ்ஞானிகளில் ஒருவர். இவர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ராஜீவ் பெல்லோஷிப் புரோகிராம் வழியாக தொழில்முனைவோர் பயிற்சி சுற்றுலாவிற்கு மூன்றுவார காலம் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் நடைபெறும் ஆக்கத்திறன் பயிற்சியில் கலந்து கொள்கிறார். கூகுள், பேஸ்புக், இபே, ஆட்டோடெஸ்க் உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்திறன் குறித்தும் நேரில் சென்று பார்வையிடும் திட்டம் இதில் உள்ளது. கலிபோர்னியாவின் மோத்வானி ஜடிஜா அறக்கட்டளை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாஷா நஸீமுக்கு நல்வாழ்த்துக்கள் .

மாஷா நஸீம் பெருவிளையில் நடத்திவரும் மாஷா ஆக்கத்திறன் மையத்தில் இளம்விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றன. நமது பகுதியைச் சேர்ந்த அறிவியல் ஆர்வம் மிக்க மாணவ மாணவியர்கள் இந்த அறிவியல் ஆக்கத்திறன் மையத்தை தொடர்பு கொள்ளலாம். புதிய விஞ்ஞானிகளை உருவாக்கும் ஆக்கத்திறன் மையம் குறித்து விரிவாக அறியவும் தொடர்பு கொள்ளவும் இணையதள முகவரி:https://www.mashanazeem.in/

அறிவியல் நட்சத்திரம் மாஷாநஸீம்:

மாஷாநஸீம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்திற்கும் புகழ்சேர்க்கும் ஒரு அறிவியல் நட்சத்திரம். சுயமாக ஒளிரும் ஆற்றல் மிக்க மாஷா நஸீம் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு நாகர்கோவில் பெருவிளையில் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அவர் நடத்தும் மாஷா ஆக்கத்திறன் மையம் (இன்னோவேஷன் சென்டர்) வளரும் மாணவ மாணவியரின் அறிவியல் கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டும் ஒரு இயக்கமாக இருந்து வருகிறது. கல்வித்துறை சார்பில் தேசிய அறிவியல் கண்காட்சி விருதுகளைப் பெறுவதற்கு தொடர்ந்து வழிகாட்டுகிறார்.குடிநீர் குறைந்த செலவில் சுத்திகரித்தல், சோலார் பவர் ஜெனரேசன், வாக்கிடாக் எனப்படும் நடக்கும் போதே மின்சாரம் தயாரிக்கும் கருவி, பல்புகளை தரையில் இருந்தவாறே கழற்ற உதவும் கருவி என பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டியுள்ளார்.

பள்ளிப் பருவத்திலேயே அறிவியல் துறையில் சாதனை நிகழ்த்திய மாணவி. இதுவரையிலும் பனிரெண்டு தொடர் அறிவியல் கண்டு பிடிப்புகளை புதிதாக கண்டு பிடித்துள்ளார். திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் ஒலிஎழுப்பும் பல்கர் அலாரம் என்ற கண்டுபிடிப்பை நான்காவது வகுப்பில் பயிலும் போதே உருவாக்கினார். .நெருப்பின்றி சீல்வைக்கும் சீல் மேக்கர்,ஹைடெக் டிரைன் டாய்லெட்,எந்திர சுமை தூக்கி,பியூவல் சிஸ்பென்ஸர், பேடி டிரேன்ஸ் பிளேன்டர், டீ பிளக்கேர்ஸ் ட்ரெ என இவரது கண்டுபிடிப்புகள் உருவாகியுள்ளன.

அண்மையில் இவரது கண்டுபிடிப்பான சாலைவிபத்துகளை தடுக்கும் புதிய கருவி GO AHED.வாகன ஸ்டிரியங்கில் ஹாரன் இருப்பது போன்று இரண்டு பட்டன்கள். அவை தனித்தனியே ஒரு பெட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். வாகனம் ஓட்டும் போது குறிப்பிட்ட இடைவெளியில் அதை அழுத்த வேண்டும். அழுத்தாவிட்டால் சப்தம் எழும்பும். நள்ளிரவு தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களை விழிப்புப் படுத்தும் கருவியாக இது திகழ்கிறது.

மாஷா நஸீமின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் நடைமுறை அறிவியல் சார்ந்த மக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பயன்பாட்டு அம்சங்களை கொண்டுள்ளது.

இரு சர்வதேச விருதுகள்,ஐந்து தேசிய விருதுகள், இரண்டு ஜனாதிபதி விருதுகள், ஐந்து தென்னிந்திய விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஜப்பான் , யுஏஇ நாடுகளின் அறிவியல் கருத்தரங்கில் இந்திய அரசின் சார்பில் கலந்திருக்கிறார்.

தனது மகளுக்கு ஆர்வமூட்டி, அறிவியல் சாதனைகளை நிகழ்த்த ஆதர்ச சக்தியாய் இருக்கும் கருவூலத்துறை அலுவலர் நண்பர் காஜா நஸீமுக்கும் இனிய வாழ்த்துக்கள்.. 

இந்த இளைய விஞ்ஞானியின் இணையதள முகவரி: https://www.mashanazeem.in/

நன்றி:ஹெச்.ஜி.ரசூல்
பரிந்துரை:கவியன்பன் கலாம், அபுதாபி

Advertisement