அதிரை பேரூராட்சியில் கடற்கரை தெரு இளைஞர்கள் எழுச்சியுடன் நடத்திய உள்ளிருப்பு போராட்டம்!

அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த பல மாதங்களாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நமது அதிரை பிறையில் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறோம். ஆனால் இதற்கு பேரூராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதிரை கடற்கரை தெரு முஹல்லா வாசிகள், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தை அடுத்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீண்டும் இன்று மாலை அதிரை பேரூராட்சியில் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் அமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் 2-வது முறையாக நடைபெற்றது. இதில் கடற்கரைத்தெரு இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அதிரை காவல் நிலையத்தில் கும்பலாக சென்ற இளைஞர்கள், இது குறித்த மனுவை வழங்கினர். இதையடுத்து, அதிரை பேரூராட்சி அலுவலர்கள் நாளை நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டத்தை இளைஞர்கள் நிறைவு செய்தனர்.  கடற்கரைத்தெரு இளைஞர்களின் போராட்டத்தில் அனைத்து தெரு இளைஞர்களும் கலந்துகொண்டு ஆதரவளித்தனர்.

Close