நண்பனை சந்திக்க அதிரை வந்த இளைஞர் பட்டுக்கோட்டையில் நடந்த விபத்தில் மரணம்!

திருச்சி MIET பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் சென்னையை சேர்ந்த மாணவர், அதிரையில் உள்ள தனது நண்பனை சந்திப்பதற்காக பைக்கில் வந்துள்ளார். தனக்காக பட்டுக்கோட்டையில் காத்திருந்த அதிரை நண்பனை ஏற்றிக்கொண்டு ஊருக்கு புறப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை அண்ணப்பூர்ணா திரையரங்கம் அருகே இவர்கள் இருவரும் பைக்கில் செல்லும் போது பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளனர். இதில் திருச்சியிலிருந்து வந்த மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழக்கம் போல பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை எனக்கூறி முதலுதவியை மட்டும் அளித்துவிட்டு தஞ்சைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து அதிகாலை சுமார் 3:30 மணியளவில் தஞ்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே திருச்சியிலிருந்து வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அதிரை மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதே போல், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞரும் விபத்தில் காயமடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததால்அவர் உயிரிழந்தார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் போதிய வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி நாளை காலை 10 மணிக்கு அமைதிப் போராட்டத்தை இளைஞர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Close