அதிரையில் இன்று நடைபெற்ற நெஞ்சை உருக்கும் சம்பவம்!

அதிரை காட்டுப்பள்ளிவாசல் தர்காவில் தங்கி வந்த வயது முதிர்ந்த நபர் ஒருவர் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டதாக அதிரை தமுமுக வினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் விசாரித்ததில், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக உடல் நிலை குன்றிய நிலையில் அந்த நபரை அவரது மகள் விட்டுச்சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஜனாசாவுடன் அவரின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், அவரது குடும்பத்தினர் ஜனாசாவை ஏற்க மறுத்துவிட்டதால் வேறு வழியின்றி மற்ற உறவினர்களுக்கு தொடர்புகொண்டுள்ளனர். அவர்கள் யாரும் உதவ வராததால் வேறு வழியின்றி, ஜனாசாவை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தக்வா பள்ளிவாசலுக்கு கொண்டு சென்ற தமுமுக வினர் ஜனாசாவை குளிப்பாட்டி, மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.

தங்கள் இளமை பருவத்தையெல்லாம் உழைப்பில் கழித்து குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்த அதிரை ஆண்கள் வயோதிக பருவத்தில் பிள்ளைகளாலும், மனைவியாலும் அவமரியாதை செய்யப்படுகின்றனர். சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் மனைவியின் பெயரிலும், மகளின் பெயரிலும் எழுதிக்கொடுத்துவிட்டு சொத்துக்கள் இல்லாமல் சொந்தபந்தங்களால் வயது முதிர்ந்த ஆண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து உழைத்து இளமையை இழந்து முதுமையுடன் ஊருக்கு வரும் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என குமுறும் ஆண்கள் அதிரையில் ஏராளம்.

இன்று உங்களது பெற்றோர்களை நீங்கள் புறக்கணித்தால் நாளை உங்களை உங்கள் பிள்ளைகள் புறக்கணிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Close