இலங்கையில் தொடரும் பதற்றம்… பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் கடைகள் சூறையாடல்!

அம்பாறை, திகண பிரதேசத்திற்கு அடுத்ததாக இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் வெடித்த இனக்கலவரம் காரணமாக  இதுவரை 160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளில் உள்ள 10 பள்ளிவாசல்களும் சேதம் ஏற்பட்டு சில பள்ளிவாசல்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல நூறு கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரினவாதிகளின் அட்டகாசங்களுக்கு எதிராக கொழும்பில் கொந்தளித்து எழுந்த முஸ்லிம் இளைஞர்கள் இரவு 7 மணிதொடக்கம் நள்ளிரவு தாண்டிய நிலையிலும் அலரி மாளிகையின் பின்வாசல் பிரதேசத்தை முற்றுகையிட்டு மனித சங்கிலிப் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இந்நிலையில் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் போய் வரும் வழி பல மணி நேரங்களாக மூடப்பட்டு முற்றுகையிடப்பட்ட நிலையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கண்டி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Close