ரயில் டிக்கெட்டை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றலாம்!

ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்துவிட்டு பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்றும் வாய்ப்பை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பயணிப்பவர் அரசு ஊழியராக இருந்தால் அவர், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் பெயரை மாற்றி கொள்ளலாம். குழுவாக முன்பதிவு செய்பவர்கள், மாணவர்கள், கல்யாணத்திற்காக குழுவாக முன்பதிவு செய்பவர்கள் 48 மணி நேரத்திற்கு முன் பயணி பெயரை மாற்றலாம்.

டிக்கெட்டில் பெயரை மாற்ற குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக மூத்த டிக்கெட் மேற்பார்வையாளரை நேரில் சந்தித்து கடிதம் வழங்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுற்றுலாவிற்காக குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் அவர்கள் அந்த கல்வி நிறுவனத்தின் முதல்வரிடம் கடிதம் பெற வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு முறை மட்டுமே பெயர் மாற்றம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த டிக்கெட் மேற்பார்வையாளர்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே இருப்பதால் இந்த வசதியை கிராம பகுதி மக்கள் பயன்படுத்துவது சிரமமாக இருக்கும் எனவும் இணையம் மூலம் டிக்கெட் பெயர் மாற்றும் வசதியை கொண்டு வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Close