தமிழக எல்லைக்கு வந்தது ரத யாத்திரை!

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழகம் வரும் ரத யாத்திரை இன்று (20.3.2018) ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இறுதியாக ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது. கேரளாவிலிருந்து தமிழகம் வரவுள்ள இந்த ரதயாத்திரை மூலம் சட்டஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது என எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், நேற்று தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாகக் எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்பு கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் ‘ராம் ராஜ்ய யாத்திரை என்ற பெயரில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்தவிருக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிற்கும், அதற்கு அனுமதியளித்துள்ள மத்திய பா.ஜ.க அரசின் எடுபிடியான அதிமுக அரசிற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோவில் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இதுபோன்ற யாத்திரைகளை தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுத்து நிறுத்துவதோடு, மீறி நுழைந்தால் தமிழக எல்லையிலேயே கைது செய்து உத்திரபிரதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

இதே போன்று டி.டிவி தினகரன் ரத யாத்திரையை அனுமதித்த தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே ரத யாத்திரை நெல்லை வழியாக வர உள்ளதால், நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக நுழையும் இந்துத்துவ ரதயாத்திரையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற அரசியல் தலைவர்கள் பலர் நேற்று இரவே கைதுசெய்யப்பட்டனர். இன்று காலை மதுரை- விருதுநகர் மாவட்ட எல்லையில் பாறைப்பட்டி என்னும் இடத்தில் சென்றுக்கொண்டிருக்கும் போது திருமாவளவன் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தற்போது வாடிப்பட்டியில் நாடார் திருமண மண்டபத்தில் வைத்திருக்கின்றனர்.

இருப்பினும் நெல்லை எல்லையில் தமுமுக, SDPI, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், பெரியார் அமைப்புகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Close