சாதி கொடுமை… இஸ்லாத்திற்கு மாற முடிவெடுத்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!

மதுரையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் பேரையூர் அருகே உள்ள சந்தையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல்வேறு சமூக மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள இந்திரா காலனியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பு மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் இருதரப்பினரும் தனித்தனியாக கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். இரு கோயில்களுக்கும் இருதரப்பு மக்களும் சென்று வழிபடுவதும், திருவிழாக்களில் பங்கேற்பதுமாக ஒற்றுமையாக இருந்தனர்.

இந்நிலையில், 2013-ம் ஆண்டு ஒருதரப்பினருக்கு சொந்தமான கோயிலை சுற்றி சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். இந்த சுவர் கட்டப்பட்ட இடம் இரு தரப்பினருக்கும் பொது பயன்பாட்டுக்கு அரசு ஒதுக்கிய நிலம் என்றும், அந்த நிலத்தில் கட்டிய சுவரை அகற்ற வேண்டும் என்றும் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இருதரப்பு மக்களிடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர், ஆர்டிஓ, போலீஸார் என இருதரப்பினரும் மாறி, மாறி புகார் அளித்து பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில், அந்த சுவரை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் சுவரை அகற்றாததால் அதிருப்தியடைந்த ஒருதரப்பினர், நேற்றைய தினம் பயங்கர ஆயுதங்களுடன் சுவரை இடிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் தீண்டாமைச் சுவரால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருவதாகவும் இதற்கு தீர்வு காண வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் 56 நாட்களாக மலைமேல் குடிபெயர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் உரிமைப் பிரச்னைக்காக மழையிலும், வெயிலிலும் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அரசு இந்த விவகாரத்தில் தலையிடாத காரணத்தால் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக இந்து மதத்தை பின்பற்றி வரும் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை உழைத்து நாங்கள் உண்ணும் உணவைக் கூட வெட்கப்பட்டு சாப்பிடும் அளவிற்கு இழி வார்த்தைகளால் அவமானத்தை சந்திப்பதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Close