Adirai pirai
articles islam posts உள்ளூர் செய்திகள்

அதிரையின் முன்னோர்களுக்கும், பாஜக வினருக்கு இடையிலான ஒற்றுமை!

“இந்த தலைப்பு உங்களில் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்”

“இதனை எழுதிய என் மீது வெறுப்பு உண்டாகலாம்”

“ஊர் பாசம் பீறிட்டுக்கொண்டு என்னை வசைபாட முயலலாம்”

“ஆனால், அதற்காக இந்த பாவத்தை நான் தட்டிக் கேட்காவிட்டால் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்”

“எனவே அல்லாஹ்வின் கோபத்தை விட உங்களின் கோபமும், வெறுப்பும் எனக்கு பெரிய பொருட்டல்ல”

“இந்த கட்டுரையை வாசித்த பிறகு உங்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும்”

“இதை விட உகந்த தலைப்பும் இந்த கட்டுரைக்கு வேறு இல்லை”

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முஸ்லீம்களின் ஷரீஅத் சட்டங்களுல் ஒன்றான தலாக் சட்டத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில்,  மசோதாவை நிறைவேற்றியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள், இந்த ஷரீஅத் சட்டத்தில் நடைமுறை சிக்கல் இருக்கிறது போன்றவை. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நமது அதிரை மக்கள் உட்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் கொதிந்து எழுந்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த ஆண்டு அதிரை கடைத்தெருவில் எந்த இயக்க சார்பும் இன்றி மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு உலமாக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனை மிகப்பெரிய எழுச்சியென நாம் பேசி அகம் மகிழ்ந்தோம்.

ஷரீஅத் மீது பாஜக எப்படி கை வைப்பது என கொதித்து எழுந்த நாம், நமதூர் முன்னோர்கள் ஷரீஅத்தில் கை வைத்ததையும், நாம் அதனை ஊர் கலாச்சாரம் என்ற பெயரில் பெருமையுடன் பின்பற்றி வருவதையும் சிந்திக்க தவறிவிட்டோம். பாஜக எப்படி ஷரீஅத்துக்கு உட்பட்ட தலாக் சட்டத்தில் நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறி தலையிட்டதோ அதே போன்று தான் நமதூர் முன்னோர்களும் ஷரீஅத்துக்கு உட்பட்ட இஸ்லாமிய பாகப்பிரிவினை முறையில், இஸ்லாமிய திருமண முறையில் தலையிட்டு வீடு வரதட்சனை, வீட்டோடு மாப்பிள்ளை முறை போன்றவற்றை கொண்டு வந்தனர். ஆரம்ப மார்க்க கல்வி தொடங்கி, ஜும்மா பயான்கள், பொதுக்கூட்ட மேடைகள், ஆன்லைன் பயான்கள் என அனைத்தையும் கேட்கும் நாம் இதனை தவறு என விளங்க மறுக்கிறோம்.

இந்த நேரத்தில் கலிபா உமர்(ரலி) அவர்களின் சம்பவம் ஒன்றை நாம் நினைவு கூர்வோம்:

மூதாட்டியின் உத்தரவுக்கு கட்டப்பட்ட கலீபா உமர் (ரலி)

திருமணம் புரிய விரும்பும் ஆண்கள் மணமகளுக்கு தரும் மஹர் தொகை அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஆண்களின் திருமணம் தடைபட்டது. உமர்(ரலி) அவர்கள் இப்பிரச்னையை ஈரடுக்கு குழுவில் விவாதித்து முடிவெடுத்து பொதுமக்களைப் பள்ளி வாசலில் கூட்டினார்கள். மேடையேறிய கலீபா, நபிகள் நாயகம் வழங்கிய மஹரை விட அதிக மஹரை யாரும் வழங்கக் கூடாது. இந்த ஆணையை மீறி வழங்கப்படும் மஹர் பறிமுதல் செய்யப்பட்டு பைத்துல்மால் பொதுநிதியில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள்.

உடனே ஒரு மூதாட்டி, உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கிவிடும்” என்று கூறினார். கீழே இறங்கிய உமர் (ரலி) அவர்கள் அம்மூதாட்டி அருகே சென்று காரணம் கேட்டார்கள்.

அம்மூதாட்டி “”மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-20வது வசனத்தை நினைவூட்டினார்கள்.

கலீபா அவர்களுக்கு நல்வழி காட்டியதாக அம்மூதாட்டியைப் பாராட்டினார். மூதாட்டி நினைவுபடுத்தியபடி அதிக மஹர் பெற மகளிருக்கு உரிமை உண்டு என்றும் பிரகடனப்படுத்தினார். மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.

மேண்மை பொருந்திய கலிபா உமர் (ரலி) அவர்களுக்கு ஷரீஅத்தில் கைவைக்க உரிமை இல்லாத போது, நமதூர் முன்னோர்கள் அந்த உரிமையை யார் கொடுத்தது. முஹம்மது நபி தனது இறுதி பேருரையின் போது, லட்சோப லட்சம் சஹாபாக்கள் முன்னிலையில், இஸ்லாத்தை பரிபூரணமாக்கிவிட்டென் என கூறிவிட்டு இறைவா இதற்கு நீயே சாட்சி எனக்கூறி நிறைவு செய்தார்கள். அது தான் உலகம் அழியும் நாள் வரையிலான சட்டம். அதில் எந்த மாற்றமும் செய்ய யாருக்கும் அதிகாரமில்லை. ஆனால், நமது முன்னோர்கள் எப்படி அதிகாரம் எடுத்து கொண்டனர்?

ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்றால் பெண் வீட்டார்கள் படும் கஷ்டம் சொல்லுந்தரமன்று. அதுவும் நமதூருடைய தொன்று தொட்ட வழிமுறைகள் பெண் வீட்டார்களுக்கு மேலும் சிரமங்களை தரக்கூடியதாகவே இருந்து வந்தது. குறிப்பாக வீட்டு வரதட்சனை என்ற பாவத்தை மார்க்கம் அறிந்தவர்கள், அறியாதவர்கள் என அனைவரும் செய்துகொண்டிருக்கின்றனர். இந்த வீட்டு வரதட்சனை கொடுமை இன்று வரையிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. குடும்பத்திற்க்கு ஒரு உலமா இருக்கக்கூடிய நமது அதிரையில், கல்வியாளர்கள் நிறைந்து காணப்படும் நமது அதிரையில் இன்னும் ஒழிக்க முடியாத கொடுமையாக இருந்து வருகின்றது இந்த வீட்டு வரதட்சனை.

ஊரில் வாரா வாரம் ஜும்மா பயான்கள், மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டங்கள், சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இந்த பயான்களில் ஊரில் தொடர்ந்து நடக்கும் இந்த கொடுமையை பற்றி பெரும்பாலும் பேசப்படுவது இல்லை. மார்க்க விளக்க கூட்டங்கள் மூலம் அதிரையில் தொன்று தொட்டு பல காலங்களாக நடைபெற்று வந்த பல்வேறு மூடப் பழக்க வழக்கங்கள் அதிரையில் சமீப காலங்களில் ஒழிக்கப்பட்டுள்ளன. அதுபோல் இந்த வீட்டு வரதட்சனை கொடுமை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கடந்த 10-15 வருடங்களாக அதிரை திருமணங்களில் பெரும்பாலும் பண வரதட்சனைகள் ஒழிக்கப்பட்டுள்ளது என்றாலும் இன்னும் பால்பழம், ஹல்வா போன்றவைகள் வாங்குவது, வீட்டு வரதட்சனை வாங்குவது, திருமணத்தில் இத்தனை சஹன் வேண்டும் என்று பெண் வீட்டாரிடம் வாங்குவது போன்ற பிச்சைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் மிகவும் வருத்தத்திற்குறிய செய்தி என்னவென்றால் பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டார்களுக்கு இது பாவம் என்றே தெரிவதில்லை. பலர் மார்க்கம் தெரியாமல் இதனை செய்து வருகின்றார்கள். இதற்கு யார் மீது குறை சொல்வது? பெண் வீட்டார்கள் மீதா? மாப்பிள்ளை வீட்டார்கள் மீதா? இந்த பாவம் குறித்து பெரிய அளவில் எச்சரிக்காதவர்கள் மீதா?

நமதூரில் பல இளைஞர்கள் தங்களின் மகளுக்கும், சகோதரிக்கும் வீடு கட்ட பொருள் சேர்ப்பதற்க்காகவே தங்கள் பொன்னான இளமை பருவத்தை கழித்து விடுகின்றனர். இதனை பல்வேறு துறைகளில் சாதிக்க தகுதி இருந்தும் நமது இளைஞர்களுக்கு நடக்காத ஒன்றாகி விடுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் வீடு கட்டுவதனாலேயே நமது அதிரையின் எல்லை மிலாரிக்காடு வரை நீண்டு விட்டது. இவ்வாறு கட்டப்படும் வீடுகளும் வருடத்தில் மே மற்றும் டிசெம்பர் மாதங்களை தவிர்த்து ஏனைய மாதங்களில் பூட்டப்பட்டே கிடப்பதை நம்மால் காணமுடிகின்றது. இதனை வைத்து ரியல் எஸ்டேட் முதலைகள் கோடி கோடியாக சம்பாதித்து தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பி கொள்கின்றனர்.

நமதூரில் சில இளைஞர்கள் பெண் வீட்டார்களிடம் வரதட்சனை, வீடு வாங்குவது, ஏனைய பொருட்கள் வாங்குவதை விரும்புவதில்லை. நபி அவர்களின் வழிமுறைபடி மஹர் வழங்கி எளிமையான முறையில் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றனர். ஆனால் பெற்றோர்கள் இந்த திருமணத்தை தங்கள் குடும்ப கவுரவத்திற்காகவும், பழமையில் ஊரிப்போன காரணத்தினாலும் எளிமையான முறையில் நடக்க விரும்புவதில்லை.

மேலும் சில பெண் வீட்டார்கள் பலர் தாங்களாக முன்வந்து மாப்பிள்ளை வீட்டார்களுக்கு வீட்டையும் வழங்கி அன்பளிப்புகளையும் வழங்குகின்றனர். அன்பளிப்புகளுக்கு இஸ்லாத்தில் தடை இல்லை என்றும் இவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் நமது கேள்வி என்னவென்றால், இஸ்லாம் வழியுறுத்திய பாகப்பிரிவினையை அவர்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா என்று…? இதே போன்ற அன்பளிப்பை தங்கள் ஆண் மகனுக்கு வழங்க மறுப்பது ஏன்? இஸ்லாம் அதை தான் வலியுறுத்தியதா? ஷரீஅத் முறைப்படி பாகப்பிரிவினையில் பெண்களை விட ஆண்களுக்கு தான் சொத்தில் அதிகம் பங்கீடு வழங்க வேண்டும். ஆனால் நமதூரில் ஆண்களுக்கு சிறு துண்டு கூட சொத்தில் பங்கு கிடைப்பது இல்லை. மேலும் அவர்களின் தானாக சம்பாதிக்கும் பணத்தையும் பிடுங்கி பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், ஆண்களுக்கும் மிகப்பெரிய அநீதி இழைக்கப்படுகிறது.

செல்வம் படைத்த பெண் வீட்டார்கள் இவ்வாறு வழங்குவதன் காரணத்தால் மாப்பிள்ளை வீட்டார்களின் மனதில் பெண் வீட்டார்கள் அன்பளிப்பு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு சடங்காக, வரதட்சனையாக மாறிவிடுகிறது. விளைவு…..பல ஏழை குமர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். அதே போல், மாப்பிள்ளை வீட்டார்கள் சிலர் “நாங்களாகவே வீடு கேட்கவில்லை, பெண் வீட்டார் விருப்பப்பட்டு தான் வீடு தருகின்றனர்” என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். ஆனால், இவர்கள் தாங்கள் திருமணம் செய்யும் பெண் வீட்டாரிடம் க்ரு வேளை வீடு இல்லாமல் இருந்திருந்தால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருப்பார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலும் அமைதியே பதிலாக கிடைக்கிறது.

பெண்களுக்கு ஒரு புறம் பாதிப்பு என்றால், ஆண்களுக்கும் இதை விட பாதிப்பு அதிகமாக உள்ளது. வீடு வரதட்சனை முறையால் நமதூரில் பெரும்பாலான சொத்துக்கள் பெண்களின் பெயரில் எழுதி வைக்கப்படுகின்றன. இதனால், வெளிநாட்டில் இளமையை இழந்து ஊர் திரும்பும் முதியவர்களுக்கு மனைவி, மகள், மருமகன் போன்றவர்களிடம் இருந்து பழைய மரியாதை கிடைப்பதில்லை. தான் கட்டிய வீட்டிலேயே அடங்கி ஒடுங்கி வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு உள்ளுக்குள் குமுறிக்கொண்டு வாழும் வயதான ஆண்கள் அதிரையில் ஏராளம். இதனால் வீட்டை விட்டு வெளியேறி தர்காக்களில் தஞ்சம் அடைந்தவர்கள் பலர் உள்ளனர். பெரும்பாலான தர்காக்கள் முதியோர் இல்லங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அண்மையில் குடும்பத்தால் கைவிடப்பட்டு தர்காவில் உயிரிழந்த முதியவரின் உடல் உறவினர்கள் இன்றி சமுதாய இயக்கத்தினரால் அடக்கப்பட்ட தகவல் நம் அனைவரையும் உலுக்கியது. ஆனால், அதனை படித்த போக்கிலேயே நாம் கடந்து சென்றுவிடுகிறோம். எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.

இவ்வாறு குடும்ப கவுரவத்திற்க்காக மார்க்க நடைமுறைகளை மறந்து ஆடம்பரமாக, வரதட்சனை வழங்கி திருமணம் செய்யப்படும் தம்பதிகளின் வாழ்வில் அல்லாஹ்வின் உதவியும் ஒற்றுமை இல்லாமல் போய்விடுகிறது. இனி வரும் காலங்களில் வரதட்சனைகள் இல்லாத ஆடம்பரம் இல்லாத எளிமையான திருமணங்களை முடிக்க நாளைய மாப்பிள்ளைகளும் அவர்களின் பெற்றோர்களும் முன்வர வேண்டும்.

வீடு வரதட்சனையால் மார்க்கத்தின் அடிப்படையில் நாம் செய்யும் பாவங்கள்

1. வரதட்சனை

2. பாகப்பிரிவினை(ஆணுக்கு சொத்துரிமை மிகக்குறைவு)

3. ஆணின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்பம் பெண்ணின் கட்டுப்பாட்டுக்குள் போகிறது.

4. இந்த நிர்பந்தத்தினால் வெளிநாட்டு பணிக்கு செல்வதால், மனைவியை பிரிந்து இருக்கும் காலம் அதிகமாகிறது.

5. முதுமையில் பெற்றோர்கள் கைவிடப்படுகின்றனர். குறிப்பாக தந்தைமார்கள் அவமரியாதை செய்யப்படுகின்றனர்.

6. இஸ்லாம் காட்டித்தந்த வழியில் திருமணம் நடைபெறுவது இல்லை.

7. வீடுகளை கட்டுவதற்காக ஹராமான சம்பாத்தியத்தையும் சிலர் தேர்வு செய்கின்றனர்.

8. வீடுகளுக்காக பல குடும்பங்கள் வட்டியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.

9. முதிர்கன்னிகள் அதிகமாகின்றனர்.

10. தவறான வழிகளிலும் பெண்கள் செல்லும் நிலை உள்ளது.

11. கணவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை இல்லை.

12. தந்தையின் கண்டிப்பு இன்றி குழந்தை வளர்கிறது.

13. பெற்றோரின் ஜனாசாவை கூட மகன் காண முடியாத நிலை.

14. விவாகரத்து அதிகமாகிறது

இவை அனைத்திலிருந்தும் இனி வரும் சந்ததியை பாதுகாக்க ஊர் வழக்கம் என்ற பெயரில் நடைபெறும் வீடு வரதட்சனை என்னும் ஊர் கொல்லியை விரட்டி அடிப்போம்

வீடு வரதட்சனையை ஒழிப்பது எப்படி?

அதிரையில் வீடு வரதட்சனை முறையை தவறு என்று நாம் பேசி வந்தாலும், அதனை தற்போதைய சூழலில் களைவது எப்படி என்பது குறித்து பலரும் முறையான செயல்திட்டங்களை முன் வைப்பது இல்லை. ஆனால் நமது மாற்றம் காண்போம் என்ற குழுவின் மூலம் செயல் திட்டத்தை முன்வைத்து இதனை ஒழிக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளோம்.

செயல்திட்டம்:

• வீடு வரதட்சனை வாங்குவது தவறு என திருமணம் செய்ய உள்ள இளைஞர்கள் புரிந்து வைத்திருந்தாலும், அவர்கள் நிர்பந்தமான நிலையிலேயே வீடுகளை வாங்குகின்றனர்.

• காரணம், தன்னுடைய வீட்டை பெற்றோர்கள் சகோதரிக்கு வழங்கி விடுவதால் ஆண்களுக்கு வீடு என்பது இல்லாமல் ஆகிவிடுகின்றது. எனவே, அவர்கள் தவறு என தெரிந்தும் வேறு வழியின்றி மனைவியிடம் வீடு வாங்கும் நிர்பந்தமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

• எனவே, இவர்களின் சகோதரிகளுக்கும் வீடு வாங்காத ஒருவர் கணவராக அமைந்து தன்னுடைய வீட்டுக்கு மனைவியை அழைத்து சென்றுவிட்டால், இந்த இளைஞருக்கு அவருடைய சொந்த வீடு கிடைத்துவிடும். அவரும் தனது மனைவியிடம் வீடு வாங்க தேவையில்லை அல்லவா. ஆக, இவர் வீடு வாங்காத பட்சத்தில் அந்த இளைஞருடைய மனைவியின் சகோதரருக்கு அவருடைய வீடு சொந்தமாகிவிடுகிறது. இதனால் அவரும் தனது மனைவிடம் வீடு வாங்க மாட்டார். இது போல் சங்கிலி தொடராக காலப்போக்கில் கலாச்சாரம் நல்ல மாற்றத்தை நமதூரில் காணும்.

• எனவே, முதலில் நாம் மாற்றம் காண வேண்டியது இது போன்ற நிலையில் உள்ள இளைஞர்களையும், உடன் பிறந்த சகோதரிகள் இல்லாத இளைஞர்களையும் தான்.

• இது போன்ற இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வீடு வரதட்சனையின் பாதிப்புகளை விளக்கி கூற வேண்டும்.

• பின்னர் வீடு வாங்கமாட்டேன் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்தவுடன், மணமகன் குறித்த முழு தகவலை சேகரித்துக்கொள்ள வேண்டும்.

• அத்துடன், என் மகளுக்கு வீடு கொடுக்காமல் தான் திருமணம் செய்வேன் என்ற கொள்கையில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்துக்கொள்ள வேண்டும்.

• இது ஒரு திருமண தகவல் தளம் போல் உருவான பின்னர், வீடு கொடுக்க முடியாத நிலையில் உள்ள பெண் வீட்டார், அல்லது வீடு கொடுக்க கூடாது என்ற கொள்கையில் உள்ளவர்கள் நம்மை தொடர்புகொண்டு வீடு வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்வேன் என உறுதியுடன் உள்ள மாப்பிள்ளை வரன்களை கேட்டுப்பெறலாம்.

• அவர்களுக்குள் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில், வீடு வரதட்சனை இல்லாத திருமணங்கள் காலப்போக்கில் அதிகரிக்கும்.

• ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கி பிற்காலத்தில் ஊரே இதில் ஐக்கியமாகும் சூழல் உருவாகும்.

மொத்தத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்

“மாற்றம் காண்போம்”

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

தொடர்புக்கு: 9597773359