Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

மாடலிங் துறையை விரும்பும் அதிரை இளைஞர்கள்… பேஸ்புக்கால் தடம் மாறுகின்றனரா?

முஹம்மது நபியின் வாழ்க்கையில் அழகிய முன்மாதிரி உள்ளது. எப்படி ஆடை அணிய வேண்டும்? எப்படி ஆடை அணியக்கூடாது என அனைத்தையும் விளக்கியுள்ளார்கள். ஒரு மனிதன் பெருமையுடன் நடக்கக்கூடாது, ஆடையை கொண்டு பெருமையடைய கூடாது என்பதற்காக கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இஸ்லாத்தில் உள்ளது. ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள். அன்று முதல் இன்று வரை ஒருவருடைய முகத்தோற்றத்தை விட அவரை மேலும் கண்ணியமாக காட்டுவது அவர் அணிந்திருக்கும் ஆடைகளே. அதிரையை பொருத்தவரை நமது ஆடை கலாச்சாரம் கண்ணியம் வாய்ந்ததாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் வெண்மை நிற ஆடையை தேர்வு செய்து அணியும் பழக்கம் நம்மவர்கள் உடையது. நம்மை கண்ணியமாக காட்டிக்கொள்ள ஆடை விசயத்தில் அந்த காலம் முதல் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் மேற்கத்திய ஆடை கலாச்சார திணிப்பு நம்மிடம் ஊடுறுவியுள்ளது. இதனால் பலரும் மேற்கத்திய கலாச்சார ஆடைகளை அணிய தொடங்கிவிட்டனர். பல இடங்களில் அது அத்தியாவசியமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. இது ஒருபுறம் இருக்க சினிமாக்களில் வரும் நடிகர்கள் பாணியில் ஆடை கலாச்சாரம் காலப்போக்கில் மாறத்தொடங்கியது. பெண்களை கவருவதற்காக நடிகைகளின் பெயர்களில் எல்லாம் சேலைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த சினிமா மோகம் தற்போது படிப்படியாக குறைந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள மோகம் அதிகரித்துள்ளது. விதவிதமாக அழகாக தங்களை போட்டோ எடுத்து வெளியிட்டு லைக்குகள் வாங்குவதை இந்த தலைமுறை இளைஞர்கள் அதிகம் விரும்ப தொடங்கியுள்ளனர்.

ஆனால், இந்த நிலை காலப்போக்கில் மேலும் அதிகரித்து அவர்களை ஆட்டுவிக்க தொடங்கி இருக்கிறது. ஆபத்தான செல்பி எடுக்க முயன்று உயிரிழந்தவர்கள் ஏராளம். அடையாளத்துக்காக பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்குகளின் ஈர்ப்பால் பலர் அதிலேயே அதிகம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இது காலப்போக்கில் அவர்களை மானம்கெட்ட மாடலிங் துறைக்குள் தள்ளிவிடுகிறது.

பேஸ்புக்கில் கிடைக்கும் அற்பமான 100, 200, 300 லைக்குகளுக்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் விலை உயர்ந்த செல்போன், டி.எஸ்.எல்.ஆர் கேமரா போன்றவற்றை வாங்கிக்கேட்டும் தொந்தரவு செய்வதாக புகாரளிக்கும் பெற்றோர்கள் பலர் நமது அதிரையில் உள்ளனர். இதன் மூல புகைப்படத்துறையில் ஆர்வம் கொண்டு ஊடகத்திற்குள் நுழைந்தால் சமுதாயத்துக்கு நன்மை பயக்கும். ஆனால் இவர்கள் தங்களை மிக அழகானவர்களாக பாவித்துக்கொண்டு மாடலிங் துறைக்குள் செல்ல முயற்சிக்கின்றனர். பேஸ்புக்கில் ஒரு போட்டோ வெளியிட்டு லைக்குகள் வாங்குவதற்காகவே, வித்தியாசமான சட்டைகள், பேண்டுகள், கோர்டுகள், டிரவுசர்கள், பல வண்ண காலணிகள், வாங்கிக்கேட்டு பெற்றோர்களை தொந்தரவு செய்கின்றனர். இந்த லிஸ்டில் லட்சரூபாய் மதிப்பிலான பைக்குகளும் உள்ளன. இதற்காகவே தலையில் பல வண்ண டைகளை பூசிக்கொண்டும், யூதர்கள் போல் முடிவெட்டிக்கொள்ளவும் செய்கின்றனர்.

உச்சக்கட்டமாக சில இளைஞர்கள் காதுகளில் தோடு அணியவும் துணிகின்றனர். சிலர் உள்ளாடைகள் தெரியமளவுக்கும் புகைப்படம் எடுத்து வெளியிடுகின்றனர். இவர்களுக்கு ஏற்றார் போல் சில கல்லூரிகளில் ரேம்ப் வாக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதிலும் இவர்கள் கலந்துகொண்டு பின்னால் இசைக்கப்படும் இசையுடன் சேர்ந்து நடந்து வந்து தங்கள் உடல் மற்றும் உடையலங்காரத்தை காட்டுகின்றனர். மாடலிங் துறை என்பது ஒரு மாயை. வெளியில் பார்க்க ஆடம்பரமானதாக பகட்டாக தெரிந்தாலும், அது நம்மை மார்க்கத்தை விட்டு விலகிப்போக செய்யும். பெண்கள் உடலை காட்டி பொருளீட்டுவது எப்படி தவறாகுமோ அதே போன்று தான் ஆண்களும். இப்படி மாடலாக விரும்பும் இளைஞர்கள் பலர் தவறான நபர்களுடன் கூட்டு சேர்ந்து அவர்களின் வாழ்க்கை சின்னப்பின்னமாகி விடுகிறது.

பேஸ்புக்கில் உலாவரும் தந்தைகள் உங்கள் பிள்ளைகள் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்கிடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அவர்களது நடவடிக்கையை கவனியுங்கள். மாற்றம் தெரிந்தால் கண்டியுங்கள். கஷ்டம் தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கிறேன் என்று சொல்வதை நிறுத்திவிட்டு குடும்ப சூழ்நிலையை சொல்லி பிள்ளைகளை வளருங்கள்.

நாளைய சமுதாயம் நல்ல சமுதாயமாக மலரும்…

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி