Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பிலால் நகர் அருகே ECR சாலையில் ரயில் பாலம் அமைக்கப்படுமா?

காரைக்குடி – திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு ரூ. 711 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக,  தஞ்சாவூர் மாவட்டம், அதிரை ரயில் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் கடந்த 3.7.2017 -ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டடம், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வறை என அனைத்து வசதிகள் கொண்ட புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில்  50 டன் இரும்பைக் கொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதே போல், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது நடைமேடைகளை இணைக்கும்  படிக்கட்டு நடைமேடைக்கான மேற்கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், முதல் பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் அமைக்கப்படுகின்றன.

இது ஒரு புறம் இருக்க, அதிரை பிலால் நகர் ECR சாலையை கடந்து செல்லும் ரயில் தண்டவாளத்தில் கற்கள் கொட்டி பரத்தும் பணியும், தண்டவாள இடைக்கற்கள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது ரயில் நிலையத்தில் இடைக்கற்களின் மீது தண்டவாள கம்பிகளை இணைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அதிரை பிலால் நகர் ஈசிஆர் சாலை ரயில்வே கேட் அருகே தண்டவாளம் இணைக்கும் பணி முடிவடைய உள்ள நிலையில், அதன் அருகே லாரி லாரியாக மணல் கொட்டப்பட்டுள்ளது. இது எதற்காக என்று பலர் சிந்திக்கையில், இப்பகுதியில் ரயில் பாலம் அமைக்கும் பணி தொடங்க இருப்பதாக அதிரையில் ரயில்பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதிரை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களின் முக்கிய சாலையாக கருதப்படும் இந்த ஈசிஆர் சாலையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சூழலில், நாம் எதிர்பார்ப்பது போல இந்த சாலையில் ரயில் பாலம் அமைப்பதன் மூலம், ரயில் சேவை தொடங்கிய பிறகு மணிக்கணக்கில் ரயில்வே கேட்டில் வாகன ஓட்டிகள் காத்துக்கிடப்பதை தவிர்க்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.