Adirai pirai
articles islam இந்தியா

தொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்!

“நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் மதக்கலவரங்களே நடக்கவில்லை” என்று பெருமையோடு மார் தட்டுகின்றனர் பா.ஜ.கவினர். அதேசமயம், “பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபிறகு மதக்கலவரங்கள் பெரிதாக நிகழவில்லைதான். ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகள் உங்கள் கைங்கர்யம்தானே… அதையெல்லாம் செய்து நாட்டில் பீதியை உண்டாக்கித்தானே ஆட்சியைப் பிடித்தீர்கள்” என்று பதிலடி கொடுக்கிறார்கள் காங்கிரஸார்.

இதுஒருபுறமிருக்க… 2014-ம் ஆண்டுக்கு முன்பாக நிகழ்ந்த கலவரங்கள், குண்டுவெடிப்புகள், கொலைகள் என்று பல வழக்குகளிலிருந்து பிஜேபி மற்றும் அதன் சார்பு அமைப்பினர் தற்போது வரிசையாக விடுதலையாகிக் கொண்டிருப்பது, பலரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு கலவர வழக்குகளிலிருந்தும் விடுதலையாவது தொடர்கதையாக இருக்கிறது. சொராபுதின் போலி என்கவுன்டர் வழக்கிலிருந்து அமித் ஷா விடுதலை, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்து அசீமானந்தா – பிரக்யா சிங் உள்ளிட்ட மதத்துறவிகள் விடுதலை, குஜராத் காவல்துறை அதிகாரி வன்சாரா விடுதலை என்ற வரிசையில், ஹைதராபாத், மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, அடுத்த நொடியே பதவியிலிருந்து ராஜினாமாவும் செய்தார். பிறகு, அந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படாததால் மீண்டும் பதவியில் தொடர்கிறார். என்றாலும், இது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்தின்போது 97 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற பி.ஜே.பி-யின் முன்னாள்அமைச்சர் உட்பட பலரும் ஏப்ரல் 20 அன்று விடுதலையாகியுள்ளனர்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோத்ரா. இங்குள்ள ரயில்நிலையத்தில், 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, சபர்மதி ரயிலின் எஸ்- 6 பெட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அயோத்தியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த இந்து பக்தர்கள் 59 பேர் இதில் சிக்கி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கலவரம் வெடித்தது. குஜராத்தில் நடைபெற்ற பல்வேறு கலவர சம்பவங்களில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் இந்துக்களும் உண்டு என்றாலும் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள். சபர்மதி ரயிலின் பெட்டியை தீவைத்து எரித்தது இஸ்லாமியர்கள்தான் என்கிற செய்தி பரப்பப்பட்டதுதான், இத்தகைய கொடூர கலவரம் மற்றும் கொலைகளுக்கு உடனடிக் காரணமாகிப் போனது.

அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நரோடா பாட்டியாவில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் நடத்திய கலவரத்தில், கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதில் 30 பேர் ஆண்கள்; 32 பேர் பெண்கள்; 35 பேர் சிறுவர் & சிறுமியர் மற்றும் பச்சிளம் குழந்தைகள். பிறந்து 20 நாள்களே ஆன பச்சிளங்குழந்தை, ஒன்பது மாத கர்ப்பிணி கவுசர் பானு ஆகியோரும் இவர்களில் அடக்கம். சுமார் 800 வீடுகளுக்கு மேல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 -ம் தேதி வரையிலான மூன்று நாள்களில் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 790 முஸ்லிம்கள் மற்றும் 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம், இந்தியாவின் மீதே பெரும் கறையாக உலக அரங்கில் பதிவானது. இதையடுத்துதான், ‘குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி தங்கள் நாட்டுக்குள் வரக்கூடாது’ என்று அமெரிக்கா தடைவிதித்தது.

97 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பாக, பிஜேபி மற்றும் அதன் சார்பு அமைப்பைச் சேர்ந்த 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குஜராத் முதல்வர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களில் ஒருவரான மாயா கோட்னானி, பஜ்ரங்தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாபு பஜ்ரங்கி, அகமதாபாத் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கிஷன் கோரானி உள்ளிட்ட பலர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாயா கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம்., மாயா கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனையும், பாபு பஜ்ரங்கி உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. மீதமுள்ளவர்களில் 7 பேருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 23 பேருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை என விதிக்கப்பட்டது. கலவரத்துக்குத் தூண்டுதலாகவும், கலவரக்காரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், மண்ணெண்ணெய் போன்றவற்றை சப்ளை செய்து, கலவரத்துக்கு உதவி செய்ததாகவும் மாயா கோட்னானி குற்றம்சாட்டப்பட்டார். இந்த மாயா கோட்னானி மகப்பேறு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. தண்டனைப் பெற்ற அனைவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதைத் தொடர்ந்து அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ் தேவானி தலைமையிலான அமர்வு, ஏப்ரல் 20 அன்று அளித்த தீர்ப்பில், போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், மாயா கோட்னானிக்கு விதிக்கப்பட்ட 28 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்துவிட்டது. மேலும் 15 பேருக்கும் விடுதலை அளித்திருக்கும் நீதிமன்றம், பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது. ஆனால், சாகும் வரை சிறையில் இருக்கவேண்டும் என்பதை 21 ஆண்டுகள் என மாற்றியுள்ளது.

குஜராத் கலவரத்துக்கு அன்றைய மாநில முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடிக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மேலும், நரேந்திர மோடிக்கு விசா வழங்கவும் அமெரிக்கா மறுத்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி அனாலிசா டோரஸ், ’நட்புறவைப் பேணும் சிறந்த அண்டை நாட்டுத் தலைவர் மோடி. இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்’ என்று கடந்த 2015 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

எந்த மதத்தை ஆதரித்து பயங்கரவாதத்தையும், வன்முறையையும் கையில் எடுத்தாலும் தவறுதான். அதுதொடர்பான வழக்குகளை சரிவர விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும். ஆனால், தற்போது வரிசையாகக் கலவர வழக்குகளில் இருந்து, அதுவும் மிகக் கொடூரமான செயல்களைச் செய்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்டவர்கள் விடுதலையாவது… விசாரணை அமைப்புகளின் மீது சந்தேகத்தை விதைக்கிறது. அதேபோல, அன்றைக்கு நியாயமாக விசாரணை நடத்தி வழக்கைப் பதிந்தவர்கள், இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக சட்டத்தின் ஓட்டைகளைக் குற்றவாளிகள் பயன்படுத்துவதற்கு அனுமதித்தார்களா என்கிற கேள்வியும் எழுகிறது.

இதையெல்லாம் தாண்டி, இப்படி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகள் எல்லாம், பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் கவிழ்வதற்கு என்ன காரணம்? இதன் பின்னணியில் ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கிறதா என்பதை நீதிமன்றம் பரிசீலனையில் எடுத்துக் கொண்டதா என்கிற கேள்வியும் மிகமிக முக்கியமானது. காரணம், தற்போது குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் அனைவருமே.. பல உயிர்களைப் பறித்த மிகவும் முக்கியமான புகார்களில் சிக்கியவர்கள். அரசியல் காரணங்களால் இதுபோன்றவர்கள் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டால், அடுத்தது மற்றொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது வேறு சிலரும் வழக்குகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.

இத்தகைய போக்கு நீடிப்பது… நாளைக்கு நாட்டில் வன்முறையைத்தான் வளர்த்தெடுக்குமே தவிர, ஒருபோதும் அமைதியை நிலைநாட்டாது என்பதே நிதர்சனம்!

Courtesy: Vikatan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy