Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரை பள்ளிவாசல்கள் மூலம் மாணவர்களை ஏமாற்றும் கல்லூரிகள்… எச்சரிக்கை!

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் தொடங்கிவிட்டது. அடுத்து என்ன படிக்கலாம், உயர்கல்விக்கு என்ன செய்யலாம், எங்கு படிக்கலாம் என மாணவர்களும், பெற்றோர்களும் அலசி ஆராய்ந்து வருகின்றனர். இந்த சூழலில் இந்த குழப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது பெற்றோர்களையும், மாணவர்களையும் கவர்ந்து தங்கள் கல்லூரியில் சேர்த்து விட கல்விக்கொள்ளை நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

இதற்கு அவர்கள் நல்லதொரு களமாக பள்ளிவாசல்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பள்ளிவாசல்களில் எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு கல்லூரியின் விளம்பர பலகை, காலண்டர் போன்றவை உள்ளன. இதில் சிறுபாண்மை மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப், சலுகை எனக்கூறி இஸ்லாமிய மாணவர்களை இந்த கல்லூரிகள் ஈர்க்கின்றன. இது போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி மாணவர்களும் அந்த கல்லூரிகளில் பல லட்சங்கள் கொடுத்து சேர்ந்து விடுகின்றனர். பிறகு அவர்களும், பெற்றோர்களும் அனுபவிக்கும் துயரங்கள் எண்ணில் அடங்காதவை. கல்லூரியில் சேர்ந்த பின்னர் கல்லூரிகள் அறிவித்த சலுகைகள் குறித்து மாணவர்களோ, பெற்றோர்களோ கேள்வி எழுப்பினால் அவர்களது நடவடிக்கை வேறு விதமாக இருக்கும். குறிப்பாக இண்டெர்னல் மதிப்பெண்களை குறைப்பது தொடங்கி, தேர்வெழுத தடை விதிப்பது, தொடர்ந்து போராடினால் கல்லூரியை விட்டு சஸ்பெண்ட் செய்வது, டிசி கொடுப்பது, இதற்காக பெற்றோர்களை ஊரிலிருந்து கல்லூரிக்கு அலைய விடுவது என இவர்கள் அரங்கேற்றும் கொடுமைகள் உச்சத்திலும் உச்சம். இதில் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்லூரிகளும் விதிவிலக்கல்ல.

இதனால், பள்ளிப்படிப்பு வரை நல்ல மதிப்பெண்களை எடுத்த மாணவர்கள் பலர், விரக்தியடைந்து மேற்படிப்பின் மீது ஆர்வம் இழந்து தேர்வில் தோல்வியடையும் சூழலும் ஏற்படுகின்றது. இது போன்ற கொடுமைகளால் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து மாணவ மாணவிகளின் எண்ணிக்கை கணக்கிட முடியாதவை. மாணவர்களின் கல்வியை, எதிர்காலத்தை சீர்குலைத்து பணம் சம்பாதிக்கும் இந்த கல்விக்கொள்ளை நிறுவனங்களின் சதி கண்ணியம் வாய்ந்த பள்ளிவாசல்களில் இருந்தே அரங்கேற்றப்படுவது தான் வேதனை. எனவே அதிரை மற்றும் பிற ஊர்களை சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர், இது போன்ற ஏமாற்று கல்வி நிறுவன விளம்பரங்களை பள்ளிவாசல்களில் வைக்க அனுமதிக்காமல் பள்ளிகளின் மாண்பை காக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கொறோம்.

குறிப்பு: இந்த கட்டுரையை எழுதும் நானும் ஒரு பொறியியல் கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்து இதுபோன்ற கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். என்னுடைய நண்பர்கள் பட்ட க‌ஷ்டங்களை நேரில் பார்த்துள்ளேன். இதுபோன்ற நிலை யாருக்கும் ஏற்பட கூடாது என்ற அக்கறையே இக்கட்டுரையின் வெளிபாடு

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

பொதுநலன் கருதி…

அதிரை பிறை