Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற “அதிரை மேம்பாட்டு சங்கமம் – AMS” தொடக்க விழா!

அதிரையில் மக்களுக்கான அடிப்படை தேவைகளும், மேம்பாடுகளும் அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் இருந்தாலும் இந்த பிரச்சனைகளை களைவது இயலாத காரியமாக உள்ளது. எனவே அதிரை மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு அனைத்து தெருக்களின் ஒற்றுமையுடன் ஊரை முன்னேற்றும் வகையில் “அதிரை மேம்பாட்டுச் சங்கமம்” என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிமுக மற்றும் கொள்கை விளக்க நிகழச்சி சென்னை மண்ணடியில் உள்ள இந்தியன் பேலஸ் அரங்கில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சென்னை வாழ் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான உள்ளூர் துவக்க விழா நிகழ்ச்சி உழைப்பாளர் தினமான இன்று, மே 1 ஆம் தேதி அதிரை ரிச் வே கார்டன் ரெஸ்டாரண்டில் காலை 10:30 மணியளவில் தொடங்கியது. கிராஅத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் AMS ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அஷ்ரப் அலி அவர்கள் சங்கமத்தின் நோக்கங்கள், செயல்திட்டங்கள் குறித்த அறிமுக உரையை ஆற்றினார்கள். அதே போல், AMS ஒருங்கிணைப்பாளர் யூசுப் அவர்கள் இந்த தலைமை உரையை நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக முன்னாள் பேரா.அப்துல் காதர் அவர்கள் அதிரையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசினார்கள். யூசுப் மௌலானா அவர்கள் சமூக ஒற்றுமை குறித்து விளக்க உரையாற்றினார்கள். அடுத்ததாக வழக்கறிஞர் முனாப், பேரா.செய்யது அகமது கபீர், வழக்கறிஞர் நிஜாம், திமுக நகர தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் ஊர் நலன் கருதி இதில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி, ஊர் சார்ந்து தாங்கள் கருதும் முக்கிய தேவைகள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இறுதியாக அஹமது ரிழா அவர்களின் வாழ்த்துரையுடன் இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இதில் பல முஹல்லாக்களை சேர்ந்த பெரியோர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் உட்பட சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.