தேர்வின் தோல்வி, வாழ்வின் தோல்வியல்ல… மாணவர்கள், பெற்றோர்களின் கவனத்திற்கு!

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவ மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளை பார்த்திருப்பீர்கள். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியான முடிவுகளும் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்திராத சோகமான முடிவுகளும் வந்திருக்கும். ஒரு மாணவருடைய 14 வருட பள்ளிப் பருவ வாழ்க்கை இத்துடன் நிறைவடைகின்றது.

இந்த தேர்வு முடிவுகள் இந்த 14 வருட பள்ளி பருவத்தின் முடிவுகள். இதில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இது தான் வாழ்வில் முக்கியமான தருணம் என்று எடுத்துக்கொள்ளாமல் இதனை ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாம் 12ம் வகுப்பின் துவக்கத்தில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இது தான் உன் வாழ்கையின் திருப்புமுனை என்றெல்லாம் சொல்லி இருப்பார்கள். அது நீங்கள் சரியாக படிக்க வேண்டும் என்பதற்க்காக. ஆனால் இது நம் வாழ்வில் முக்கியமானது என்றால் இல்லை.

எத்தனையோ மக்கள் தேர்வில் தோல்வியடைந்து வாழ்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மதிப்பெண்கள் யாவும் அடுத்து ஒரு மாதம் ஒரு கல்லூரியில் சேரும் வரை தான் உதவும். அதன் பிறகு நம் மதிப்பெண்களை நாமே மறந்து விடுவோம். தற்போது உள்ள கல்வி முறைகள் மிகவும் பின்தங்கியுள்ளன. இவை எதிர்கால வாழ்க்கைக்கு சிறிதளவு கூட பயன்படாது.

பள்ளியில் நாம் படித்த பாடங்களை விட நாம் அங்கு இருந்த அனுபவங்கள் தான் நம்மை எதிர்காலத்தை வழி நடத்தும். பள்ளிக்கூட வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடிய தித்திப்பான தருணம். அதனை நாம் கடந்து விட்டோம், இனி அதில் நாம் கற்றுக்கொண்ட அனுபவங்களை நம் வாழ்வில் பயன்படுத்தி சென்றால் வெற்றியின் பக்கம் நம் வாழ்க்கை நகரும். அதை விடுத்து தோல்வியை சிந்திப்பதால் நமக்கு மனக்குழப்பமும், சங்கடமும், கவலையும் வாழ்க்கை மீது வெறுப்பும் ஏற்படும். இவை தேவையில்லாத சிந்தனைகளுக்கும் தவறான முடிவுகளுக்கும் காரணமாக அமையும்.

எனவே முடிந்துப்போனவற்றைப் பற்றி சிந்திக்காமல் இனி வரப்போவைதைப் பற்றி சிந்திப்பதே சாலச் சிறந்தது. இந்த நேரத்தில் தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் போல சகஜமாக நண்பர்களோடும் மற்றவர்களோடும் பழக வேண்டும். நாம் கவலையோடு இருந்தால் தான் அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு துன்புறுத்துவார்கள். அதற்க்கு நாம் இடமளிக்க கூடாது. பெற்றோர்களோடும், உறவுகளோடும், நம்மீது அக்கரை கொண்டவர்களுடனும் இது குறித்து மனம் விட்டு பேசி அடுத்தக்கட்ட முடிவை எடுக்க வேண்டும். ஆங்கிலத்தில் “Too Many Cooks Spoil The Soup” என்ற பழமொழி உள்ளது. எனவே அனைவரிடமும் கேட்டு குழம்பிவிடாமல் நல்லவற்றை கேட்டு இறுதி முடிவை எடுக்க வேண்டும்.

கல்வி வாழ்க்கையில் முக்கியமான அம்சம் என்றாலும் பலர் தங்களின் அனுபவம் கற்றுத்தந்த பாதையில் சென்று பல சாதனைகளை புரிந்துள்ளனர்.

இன்று நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்ய உதவும் விமானத்தை முதலில் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் படிப்பவறிவில்லாதவர்கள். இவர்களைப் போல எவ்வளவோ விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள்,தொழிலதிபர்கள் என பலர் படிப்பறிவின்றி தங்கள் வாழ்வில் வெற்றியடைந்துள்ளனர்.

தற்போது பணம் சம்பாதிப்பது எளிமையாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் பணம் சாம்பாதிக்கலாம். ஆனால் நம் வாழ்வில் என்ன சாதித்தோம் என்பதே மிக முக்கியம். அன்றாட வாழ்வில் எவ்வளவோ பேர் வருவார்கள் செல்வார்கள். பலர் பிறக்கின்றனர், பலர் இறக்கின்றனர். இத்தனை பேர் மத்தியில் நாமும் வாழ்ந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் காலம் பேசும் மனிதனாய் மாற வேண்டும். அனைவரிடமும் தனித் திறமைகள் இருக்கும். ஆனால் பலர் அதனை சமுகத்தின் முன் கொண்டு வர வெட்கப்பட்டுக் கொண்டு சாதிக்காமல் இருந்து விடுகின்றனர். சமுகம் இன்று ஒன்று சொல்லும் நாளை ஒன்று சொல்லும். சமுகம் சொல்வதை காதில் வாங்காமல் நம் மனம் கூறும் நற்சொற்களை கேட்டு செல்பட வேண்டும்.

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் அவற்றை வெற்றிப்படிக்கட்டுகளாய் மாற்றினால் காலம் சொல்லும் காலம் வெல்லும் மனிதராக நாமும் ஆகலாம்.

இதனை படிக்கும் பெற்றோர்கள் இது போன்ற ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்கினால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் வாழ்வின் மீது ஒரு  அக்கரை வரும். இதனை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! தேர்வின் தோல்வி வாழ்வின் தோல்வியல்ல!

சிந்திப்போம்! செயல்படுவோம்!

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close