Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. அதிரையில் தேர்வு முடிவுகளை பொறுத்தவரை நமது அதிரை பிறையில் பள்ளிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் பெயர்கள், மதிப்பெண், தகப்பனார் பெயர் உள்ளிட்டவற்றை முதன் முதகில் வெளியிட்டு வந்தோம். இந்த சூழலில் கடந்த ஆண்டு தேர்வு முடிவுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என அரசு அறிவித்தது. இது ஒரு நல்ல அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.

காரணம், இதனை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் மதிப்பெண்களுக்காக மாணவர்களை கொடுமைப்படுத்து அதிகரித்து வருகிறது. மதிப்பெண்களை நோக்கிய கல்வியையும் போதிப்பதால் தரமான கல்வி என்பது இல்லாமல் போனது. மேலும், இந்த முதல் மூன்று மதிப்பெண்களை பெரும் மாணவர்களை வைத்து தனியார் பள்ளிகள் விளம்பரப்படுத்தி ஆண்டுதோறும் கல்விக்கட்டனத்தை உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டி வந்தன. கல்விக்கொள்ளை நிறுவனங்கள் அடுத்து வரும் மாணவர்களை அதை விட அதிக மதிப்பெண் பெற வைப்பதற்காக கொடுமை படுத்துகின்றனர். இதனால் கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமற்ற போட்டி நிலவு வருகின்றன. நல்ல நோக்கத்துடன் வெளியிடப்படும் நமது பதிவுகள் இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதை நாம் விரும்பவில்லை.

மேலும் குறைவான மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள், அல்லது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு நமது இந்த பதிவுகள் தாழ்வு மனப்பாண்மையை ஏற்படுத்துகின்றன. நாம் ஆராய்ந்த வகையில் 10,12 ஆம் வகுப்பு தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்கள் உயர்கல்வியிலும், பணிகளிலும் பெரும்பாலும் ஜொலிப்பது இல்லை. ஆனால், தோல்வியடைந்த மாணவர்கள் பலர் எதிர்காலத்தில் பெரிய ஜாம்பவான்களாக உருவெடுத்துள்ளனர்.

எனவே இந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிரையில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் குறித்த செய்தியை நமது அதிரை பிறையில் வெளியிடப்போவது இல்லை என்பதை இங்கு நாம் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த தேர்வு முடிவுகளை வெளியிட்டால் நாளை மக்கள் மத்தியில் நமது தளம் அதிக ஈர்ப்பை பெரும், பார்வையாளர்கள் கூடுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த சுயநலனுக்காக கல்வியின் தரத்தை குறைத்து, கல்வி கொள்ளை நிறுவனங்களுக்கு துணை புரிந்து, மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் காரியங்களில் ஈடபட எங்களுக்கு மனம் வரவில்லை. கடந்த ஆண்டுகளில் இந்த புரிதல் நமக்கு இல்லாததால் முடிவுகளை வெளியிட்டோம். ஆனால், தற்போது தெரிந்தும் அந்த தவற்றை செய்ய நமக்கு மனமில்லை. எனவே தான் இந்த முடிவை நாம் எடுத்து தற்போது வெளிப்படையாக அறிவித்துள்ளோம்.

இந்த முடிவு போல், அதிரையின் மற்ற இணைதளங்களும் முடிவெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களுடைய சமூக அக்கரையுடன் கூடிய செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு,

அதிரை பிறை