Adirai pirai
Uncategorised Uncategorized உலகம் உள்ளூர் செய்திகள்

ஓராண்டுக்கு பிறகு சவூதி, அமீரகத்துக்கு பதிலடி கொடுத்து அதிர்ச்சியளித்த கத்தார்!

கத்தார் மீது சவூதி தலைமையிலான நான்கு அரபு நாடுகள் கொண்டு வந்த தடை சுமார் ஒரு ஆண்டை நெருங்கும் நிலையில், அந்நாடுகளின் பொருட்களை விற்பனை செய்வதற்கு கத்தர் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீவிரவாதத்துக்கு உதவுவதாகவும் தங்கள் நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதாகவும் கூறி சவூதி தலைமையில் அமீரகம், எகிப்து மற்றும் பெஹ்ரைன் ஆகிய நாடுகள் வான், தரை மற்றும் கடல் மார்க்கமான கத்தருக்கான அனைத்து பாதைகளையும் கடந்த ஆண்டு ரமளான் மாதத்தில் திடீரென மூடின. இதனால், தரை மார்க்கமாக உலகுடன் தொடர்பு கொள்ளும் கத்தரின் சவூதியுடனான ஒரே தரைவழி மூடப்பட்டதைத் தொடர்ந்து கத்தர் தனி தீவானது. சுமார் 80 சதவீதத்துக்கும் மேலான தினசரி உணவுதேவைக்கு அமீரகம் மற்றும் சவூதியைச் சார்ந்திருந்த கத்தரைத் தம் வழிக்கு இலகுவாக அடிபணிய வைக்கவே புனித ரமளான் மாதத்தில் இக்கொடிய நடவடிக்கையினை இந்நாடுகள் கொண்டுவந்தன.

ஆனால், தம் மீதான பிற அரபுநாடுகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த கத்தர், நேரடியாக அமர்ந்து பிரச்சனைகளைப் பேசி தீர்க்க தயார் எனவும் தம் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் நிலையில் எவ்வித நிபந்தனைகளையும் ஏற்கத் தயார் எனவும் அறிவித்தது.

இதற்குச் செவிசாய்க்காத இந்நாடுகள், சமரசத்துக்கு மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு முயற்சிக்கும் பிடிகொடுக்காமல் அல்ஜஸீரா தொலைகாட்சியினை நிரந்தரமாக மூடுதல் முதலான 13 நிபந்தனைகளை முன் வைத்து, அவற்றைச் செயல்படுத்தும் வரை கத்தர் மீதான தடையினை நீக்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தன.

இத்தடை அமுலில் இருந்த இந்த ஒரு ஆண்டுகாலமாக, இந்நாடுகளின் குடிமக்களை எப்போதும்போல் தொடர்ந்து கத்தரில் தொடர அனுமதித்ததோடு இந்நாடுகளிலிருந்து மூன்றாம் நாடுகள் வழியாக அந்நாடுகளின் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் கத்தர் இதுவரை அனுமதித்து வந்தது.

இந்நிலையில் திடீரென, கத்தரிலுள்ள அனைத்து வணிக வளாகங்களும் இந்த நான்கு நாடுகளின் பொருட்களை உடனடியாக கடைகளிலிருந்து நீக்க வேண்டுமெனவும் இனிமேல் இந்நான்கு நாடுகளிலிருந்து வரும் அந்நாடுகளின் பொருட்கள் எதையுமே கத்தரினுள் அனுமதிப்பதில்லை எனவும் இதற்கான தனிப்பட்ட உத்தரவுகள் ஏற்கெனவே கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் கத்தர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு முந்தைய தினம், கத்தர் மீதான தடை நீக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ”அது நீக்குவதற்கான எந்த ஒரு முகாந்திரமும் நாங்கள் காணவில்லை. தடை விதிக்கப்பட்ட நேரத்தில், கத்தர் அமீர் சவூதி அரசரை நேரில் போய் சந்தித்து பிரச்சனையை முடிக்க முயற்சி செய்வார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அதற்கு மாறாக உலக நாடுகளை வலம் வந்துகொண்டிருந்தார். எனவே, கத்தர் மீதான தடை விலக்குவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் சமீபத்தில் நான் காணவில்லை” என பெஹ்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் காலித் பின் அஹ்மத் அல் கலீஃபா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார்ர் ஒரு ஆண்டுகாலமாக அமைதியான முறையில் தடையினை விலக்குவதற்கான எல்லா வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த கத்தர், திடீரென இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதிலிருந்து ஜிசிசி அரபு நாடுகளிடையே இனியொரு இணக்கத்துக்குச் சாத்தியமுண்டா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

மேலும், இதுவரை அமைதிகாத்த கத்தர், தரைவழி திறக்கப்படவில்லையேனும் சவூதி, அமீரகத்தைச் சாராமல் சுயமாக சொந்தக்காலில் நிற்பதற்கான சக்தியை இந்த ஒரு ஆண்டுகாலத்தில் உருவாக்கிக் கொண்டு தற்போது திருப்பியடிக்க ஆரம்பித்துள்ளதாகவே இந்த அறிவிப்பை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நாட்டுகளின் பொருட்கள் முழுமையாக கடைகளிலிருந்து நீக்கப்பட்ட போதிலும் அதற்குப் பகரமாக வேறு நாடுகளின் பொருட்கள் பொதுமக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி கிடைப்பதற்கான வழிவகைகளை கத்தர் முன்னரே ஏற்பாடு செய்துவிட்டதும்

-அப்துர் ரஹ்மான்