Adirai pirai
exclusive INFORMATION Technology

பயனாளர்களின் தகவல்களை நிறுவனங்களுக்கு வழங்கியது உண்மை -ஃபேஸ்புக் ஒப்புதல்!

பயனாளர்களின் தகவல்களை 60 நிறுவனங்களுக்கு வழங்கியது உண்மைதான் என ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புகொண்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட இணைய வழி சமூக வலைதளமான பேஸ்புக், உலக நாடுகள் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தகவல் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் பேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற அரசியல் ஆலோசனை தளத்துடனும் இணைந்து செயல்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்களை திருடி தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தது வெளிவந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து  சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன், ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்ததாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் தகவல்களை 60 நிறுவனங்களுக்கு வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கூறியுள்ளது. மேலும் மிகச்சிறந்த ஃபேஸ்புக் அனுபவத்தை கொடுப்பது எப்படி என்பதற்காகவே பயனாளர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்தது உண்மையே என ஃபேஸ்புக் நிறுவனம் கூறியது பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.