அதிரையில் 3 நாட்களில் 10 லட்சம் ரூபாய் பணம் வீணாக்கப்படும் அவலம்!

தற்போது ரமலானின் இறுதி மூன்று அல்லது 4 நாட்களில் நாம் உள்ளோம். இன்றிலிருந்து நாளை, நாளை மறுநாள் வரை அதிரை பள்ளிகளில் தமாம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக எவ்வளவு பொருளாதாரம் வீணாகிறது என்பதை இந்த செய்தியில் நாம் பார்ப்போம்.

அதிரையில் இந்த 3 நாட்களில் 25 பள்ளிவாசல்களில் தமாம் நிகழ்ச்சி நடப்பதாக வைத்துக்கொள்வோம்…

பெரிய பள்ளியாக இருந்தால் தமாம் நிகழ்ச்சிக்கு 800 முதல் 1000 பேர் வரை பங்கேற்பார்கள். நடுத்தர பள்ளியாக இருந்தால் 400 முதல் 500 பேர் வரை பங்கேற்பார்கள். நாம் இப்போது சராசரியாக அனைத்து பள்ளிகளிலும் 500 பேர் வருவதாக வைத்துக்கொள்வோம்.

500 கறி பிரியாணி பட்டைக்கு 30000 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதை 25 பள்ளிகளில் கணக்கிட்டால் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பிரியாணிக்காக மட்டும் செலவிடப்படுகிறது.

அத்துடன் அந்த 500 பேருக்கு தேனீர் அல்லது ஹார்லிக்ஸ் அல்லது பாதாம் பால் போன்றவை பள்ளிகள் வாரியாக வழங்கப்படுகிறன. இதில் டீ என்றால் ஒருவருக்கு 10 ரூபாய் வீதம் 500 பேருக்கு 5000 ரூபாய் செலவாகிறது. பாதாம் பால், ஹார்லிக்சாக இருந்தால் ஒருவருக்கு 15 ரூபாய் வீதம் 500 பேருக்கு 7500 ரூபாய் செலவாகிறது. இப்போது நாம் 15 பள்ளிகளில் டீ கொடுப்பதாக வைத்துக்கொண்டால் அதற்கு மட்டும் 75 ஆயிரம் ரூபாய் செலவாகிறது, 10 பள்ளிகளில் ஹார்லிக்ஸ் கொடுப்பதாக வைத்துக்கொண்டால் அதற்கு மட்டும் 75000 ரூபாய் செலவாகிறது. ஆக மொத்தம் இதற்காக மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. சில பள்ளிகளில் சீனி சோறும் வழங்கப்படுகிறது. இதற்காக தனி பணம் செலவிடப்படுகிறது.

25 பள்ளிகளில் பிரியாணி, டீ செலவை சேர்த்தால் 9 லட்சம் ரூபாய் வந்துவிடுகிறது. அதுபோக, இந்த தமாம் நிகழ்ச்சிகளின் போது பள்ளிகளில் கூடுதலாக சவுண்ட் சர்வீஸ் கடைகளில் இருந்து டியூப் லைட்டுகள் வைக்கப்படும் வழக்கம் உள்ளது. பெரிய பள்ளியாக இருந்தால் 35 முதல் 40 லைட்டுகளும், நடுத்தர பள்ளியாக இருந்தால் 20 லைட்டுகளும் வைக்கப்படும். நாம் சராசரியாக அனைத்து பள்ளிகளிலும் 23 லைட்டுகள் வைக்கப்படுவதாக கணக்கிட்டு கொள்வோம். ஒரு டியூப் லைட்டுக்கான நாள் வாடகை சவுண்ட் சர்வீஸ் ஜெனரேட்டரில் இயங்கினால் 20 ரூபாயும், பள்ளிவாசல் மின்சாரத்தில் இயங்கினால் 50 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஜெனரேட்டருக்கான நாள் கூலி 3500 ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் ஜெனரேட்டர் பயன்படுத்தும் பள்ளிகள் குறைவு என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஒரு டியூப் லைட்டுக்கான நாள் வாடகை 50 ரூபாய் என்றால் ஒரு பள்ளிக்கு மட்டும் 1150 ரூபாய் செலவாகிறது. இதுவே 25 பள்ளிகளில் கணக்கிட்டால் 28,750 ரூபாய் செலவாகிறது. நாம் இதில் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டை கணக்கிட்டால் இதன் செலவு மேலும் அதிகரித்திருக்கும்.

மேலும் சில பள்ளிகள் பயான்களுக்காக ஹாரன் ஸ்பீக்கர்களை பயன்படுத்துகின்றன. 3 ஸ்பீக்கர்களுக்கு 3000 ரூபாய் வரை செலவாகிறது. 5 பள்ளிகளில் இதனை பயன்படுத்துவதாக வைத்துக்கொண்டால் கூட இதற்கு மட்டும் 15,000 ரூபாய் செலவாகிறது.

25 பள்ளிகளில் சராசரியாக…

• பிரியாணி செலவு: ₹ 7,50,000

• தேனீர், ஹார்லிக்ஸ், பாதாம்: ₹ 1,50,000

• டியூப் லைட், ஹாரன்: ₹ 43,750

• மின்சாரம் மற்றும் இதர செலவுகள்: ₹50000

• மொத்தம்: 9 லட்சத்து 93 ஆயிரத்து 750 ரூபாய்

பள்ளிவாசல்கள் முதல் அனைத்தையும் சராசரி விதிப்படி கணக்கிட்டால், இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். எனவே இதனை முழுமையாக ₹10 லட்சம் எனக்கூட வைத்துக்கொள்ளலாம்.

இந்த தகவல் யாவும், அதிரை பள்ளிவாசல் தமாம் நிகழ்ச்சிகளில் பிரியாணி சமைத்து கொடுக்கும் மேஸ்திரியிடமும், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் சேகரித்தவை தான். இந்த செலவுக்கணக்கில் சிலருக்கு  மாற்றுக்கருத்து இருந்தாலும் தோராயமாக 3 நாள் தமாம் நிகழ்ச்சிகளுக்காக மட்டும் இப்படி ஒரு பெரும் தொகையை நமதூர் மக்கள் வீணடித்து வருகின்றனர் என்ற விசயம் மட்டும் உறுதியாகிறது. ஊரில் எத்தனையோ குடும்பங்கள் வட்டிக்கு வாங்கிய பணத்தை மீண்டும் செலுத்த முடியாமல்   சிக்கி தவித்து வருகின்றன என்பதை நாம் அறிவோம். நாள் தோறும் பல லட்சம் ரூபாய் மருத்துவ தேவை அடங்கிய செய்திகளை ஊடகங்களில் கண்டு வருகிறோம்.

ஏன், பல்வேறு பள்ளிவாசல்கள் நிதி பற்றக்குறையால் சிக்கி தவிக்கின்றன. அவர்கள் இந்த தேவையற்ற செலவை குறைத்துவிட்டு பள்ளியின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கலாமே… இது போன்ற பெரும் தொகையை ஊர் வழக்கம் என்ற பெயரில்   நார்சாவுக்கு வீணாக செலவிடாமல், நல்ல காரியங்களுக்காக செலவிடலாமே.

ஆண்டு தோறும் தமாம் நிகழ்ச்சி நடத்துகிறோம். இதில் எத்தனை பிரச்சனைகள், நிதி குறைபாடுகள் சார்ந்து கைக்கலப்புகள் வரை உருவாகியுள்ளன என்பதை கடந்த கால வரலாறுகளின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். இந்த பணத்தை வசூலிப்பதற்காக ரமலான் இறுதியில் சிறுவர்களை வீதிவீதியாக அலைய விட்டு பணம் வசூல் செய்கிறோம். இதனால் சிறுவர்களின் இஷா தொழுகை, தராவீஹ் தொழுகையும் பாதிப்புக்குள்ளாகிறது. பணம் உதவி செய்வோர்களில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நடுத்தர குடும்ப மக்கள் தான். தனிப்பட்ட முறையில் தங்கள் முஹல்லாவுக்காக ஒரு பெரும் தொகையை ஒதுக்கிவிட்டு இதர பள்ளிகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை வழங்குகிறார்கள். இவர்கள் கஷ்டப்பட்டு பொருளீட்டிய இந்த பணம் 3 நாள் கூத்துக்காக வீணாகிறது என்றே சொல்ல வேண்டும். பல பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக பிரியாணி பொட்டலங்களை தயாரித்து உணவு வீணாவதும் அரங்கேறி இருக்கிறது.

எனவே இத்தனை குளறுபடிகளை உள்ளடிக்கி, 10 லட்சம் ரூபாய் பெரும் தொகையை வீனடிக்கும் இந்த ஊர் வழக்கம் தேவைதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகிகளும் இதனை கணக்கில் கொண்டு அடுத்த ஆண்டுகளில் இந்த தமாம் நார்சா நிகழ்ச்சியை கைவிட வேண்டும் என அதிரை பிறை சார்பாக கேட்டுகொள்கிறோம்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close