குளச்சலில் தென்பட்ட பிறையும்… குழப்பத்தை ஏற்படுத்திய தலைமை காஜியின் முடிவும்

தமிழகத்தில் பிறை தெரியாததால் சனிக்கிழமை பெருநாள் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்து அரசு அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று மாலை பிறை தெரிந்த தகவல் உறுதி செய்யப்பட்டு கேரளத்தில் இன்று நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் குமரி மாவட்டத்திலும் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

எந்த பிறையின் அடிப்படையில் ?

குளச்சல் குமரி மாவட்டத்தின் புகழ் பெற்ற முஸ்லிம் ஜமாத்துகளில் ஒன்று. இங்கே மர்ஹூம் மீரான் முஹைதீன் ஹாஜியார் மீரானியா பள்ளி வாசலை கட்டி இருக்கிறார். அவரது மகன்களில் ஒருவர்

நமது நண்பர் மீ.மு.இஸ்மாயில். இன்னொரு மகன் முஹம்மது பாரூக்.

பாரூக்கின் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முகம்மது பாரூக் மற்றும்

சுலைமான் ஆகியோர். இவர்கள் இருவரும் நேற்று மாலை 6.55 மணிக்கு ஷவ்வால் முதல் பிறையை பார்த்திருக்கிறார்கள். அதை ஜமாத்துக்கும் தெரிவித்திருக்கிறார்கள். ஜமாத் நிர்வாகம் இருவரையும் அழைத்து

தீர விசாரித்து பிறை பார்த்த தகவலை மாவட்டகாஜி அபு ஸாலிஹ் ஹஸ்ரத் அவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஜமாத்துல் உலமா சபை கூட்டத்தில் பெருநாள் பிறை

காணப்பட்ட செய்தி உறுதி செய்யப்பட்டு

குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள்

என்று மாவட்ட காஜி அறிவித்தார். அதே நேரம் தமிழக தலைமை காஜி சனிக்கிழமைதான் பெருநாள் என்று அறிவித்திருக்கிறார். அதனால் குமரி மாவட்ட

கல்விக் கூடங்கள் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். இது முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கும் முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கும் பல சிரமங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

மாவட்ட காஜியை தொடர்பு கொண்டு

தமிழக தலைமை காஜிக்கு பிறை பார்த்த தகவலை சொன்னீர்களா என்று கேட்டேன்.

மாவட்ட காஜி விளக்கமாகவே பதில் சொன்னார். “நான் தலைமை காஜியை தொடர்பு கொண்டேன். அவரது உதவியாளர்

மசூது ஆலிம்தான் போனில் பேசினார். நான் குளச்சலில் பிறை பார்த்த தகவலை தலைமை காஜியிடம் கூறும்படி அவரிடம் சொன்னேன். அவரும் சொல்வதாகச் சொன்னார். ஆனால் அவர்கள் மீண்டும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.அதனால் திரும்பவும் நானே போன் செய்து கேட்டேன்.

அதற்கு, இங்கே பிறை தெரியவில்லை.

அதனால் சனிக்கிழமை பெருநாள் என்று அறிவித்து விட்டோம். இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டார்கள். மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர்

காஜா முயினுதீன் அவர்களையும்

தொடர்பு கொண்டேன். அங்கேயும் அவரது உதவியாளர்தான் பேசினார். இரண்டு மூன்று முறை போன் செய்த பிறகும் சரியான பதில் சொல்லவில்லை” என்றார் மாவட்ட காஜி. நானும் காஜா முயினுதீன் ஹஸ்ரத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். போனை எடுக்கவேயில்லை.

கேள்வி …

குளச்சல் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது .

குளச்சலில் பிறை பார்த்த பிறகும் அதை மாவட்ட காஜியே சொன்ன பிறகும் அதை ஏற்றுக் கொள்ளாமல் சனிக்கிழமைதான் பெருநாள் என்று தலைமை காஜி அறிவிக்க என்ன காரணம் ?

குமரி மாவட்டத்தின் பக்கத்து மாவட்டம்

நெல்லை மாவட்டம்.அவர்களும் கூட குளச்சலில் தெரிந்த பிறையை ஏற்றுக் கொள்ளாமல் சனிக்கிழமை பெருநாள் கொண்டாடுகிறார்கள்.

இப்படி ..

பெருநாளை முன்னிட்டு பல குழப்பங்கள்

ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. தலைமை காஜி இனிமேலாவது எந்தெந்த மாவட்ட பிறைகளை ஏற்க மாட்டேன் என தெளிவாக அறிவிக்க வேண்டும். அரசியல்வாதிகளால் மட்டுமல்ல, தலைமை காஜியாலும் கூட குமரி மாவட்டம் புறக்கணிக்கப்படுவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

எழுதியது

அபு ஹசிமா, எடலக்குடி, குமரி மாவட்டம்

Close