முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டு செல்போன் மூலம் பெறலாம்!

ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை செல்போன் மூலம் பெறும் புதிய வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை ஏற்கனவே வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கு, ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் பயணச் சீட்டு வாங்க வேண்டும்.

இதனால், பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் மணி கணக்கில் கவுண்டர் முன்பு கியூ வரிசையில் நின்று தான் பயணச் சீட்டு வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், பயணிகளுக்கு கால விரயம் ஏற்பட்டது.

இந்நிலையில், முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளையும் செல்போன் மூலம் பெறும் புதிய முறையை ரயில்வேத்துறை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

இதன்மூலம், முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டுகளை பயணிகள் இருந்த இடத்தில் இருந்தே ஸ்மார்ட்போன்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் பயணச்சீட்டை பிரிண்ட் எடுக்க தேவையில்லை என்றும், பயணச்சீட்டு பதிவானதும் செல்போனில் தோன்றும் தகவலை காட்டினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணச்சீட்டை பெறுவதற்காக பணத்தை இருப்பில் வைத்து செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த தொகையை இணையதளம் மூலமாகவோ, ரயில் நிலையங்களில் நேரிலோ செலுத்திக் கொள்ளலாம். அதேபோல், மாதாந்திர ரயில் பயணச்சீட்டுகளை புதுப்பித்து கொள்ளும் வசதியும் இடம் பெற்றுள்ளது.

நன்றி:விகடன் 

Advertisement

Close