Adirai pirai
Adirai pirai posts உள்ளூர் செய்திகள்

அதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு!

எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

பேஸ்புக்கில் நான் என்னுடைய கருத்தை வெளியிட்டதற்காக நேற்று காலை முத்துப்பேட்டை காவல்துறையினர் என்னை அதிராம்பட்டினம் வந்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். சுமார் 14 மணி நேரம் காவல் நிலையத்தில் இருந்தேன். வெளியே என்ன நடந்தது என்று தெரியவில்லை. காவல்துறையினர் என்னிடம் மரியாதை குறைவாக எதுவும் நடந்து கொள்ளவில்லை. அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை வழங்கினேன்.

நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்றிரவு சுமார் 11:40 மணியளவில் போலீசார் விசாரணை முடிந்து என்னை வெளியே அனுப்பினர். வெளியே வந்துவுடன் எனக்காக அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மக்கள், என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகையாளர் சங்கங்கள், இயக்கங்கள், அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் என்னை விடுவிக்க உணர்வுப்பூர்மாக குரல் கொடுத்திருந்ததை கண்டேன்.

அனைவருக்கும் இந்த சமயத்தில் என்னுடைய உணர்வுப்பூர்மான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் ஓடோடி வந்து உதவிய உங்கள் அனைவருடைய செயல் எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த ஒரு நடவடிக்கையால் என்னுடைய ஊடகப்பணி, எழுத்துப்பணி எந்த வகையிலும் தொய்வடையாது.

அநீதிக்கு எதிரான என்னுடைய குரல் ஊடகங்களில் தொடர்ந்து ஒலிக்கும். ஜனநாயகத்தின் 4 வது தூணாக விளங்கும் ஊடத்துறையில் தொடர்ந்து அங்கம் வகித்து நாட்டின் நலன் காக்க பாடுபடுவேன்.