Adirai pirai
help தமிழகம்

‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்!

ஈரோட்டில் தனது மகனுக்கு ஏற்பட்டுள்ள ரத்தக் குறைபாடு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவி செய்யும்படி அம்மாவட்ட ஆட்சியரிடம்  தம்பதியினர் மனு அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா பி.கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு – கஸ்தூரி தம்பதி. இவர்களுக்கு ஈஸ்வரன், கோடீஸ்வரன் என இரண்டு ஆண் குழந்தைகள். அதில் கோடீஸ்வரன் பிறந்த ஆறாவது மாதத்தில் ஒருநாள் பயங்கரமாக காய்ச்சல் ஏற்பட்டு சோர்ந்து போய் கீழே விழுந்திருக்கிறான். பதறியடித்த பெற்றோர்கள் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கின்றனர். குழந்தைக்கு உடலில் ரத்தம் குறைவாக இருக்கிறது என ரத்தம், குளூக்கோஸ் போன்றவற்றை ஏற்றி மருத்துவர்கள் குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

ஒருமாதம் கழித்து மறுபடியும் அதேபோல குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், குழந்தை சோர்ந்து போய் பொத்தென விழுந்திருக்கிறான். பதறிப்போன பெற்றோர் குழந்தையை கோயமுத்தூருக்குத் தூக்கிச் சென்றிருக்கின்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ‘நான் சொல்லப்போற விஷயத்தைக் கேட்டுப் பயந்துடாதீங்க. உங்க குழந்தைக்கு தலசீமியா என்கிற ரத்தக் குறைபாடு நோய் இருக்கு. மாச மாசம் ரத்தம் ஏத்திக்கிட்டே இருந்தால்தான் பையன் நல்லா இருப்பான்’ என்று தெரிவித்துள்ளனர். 

கோடீஸ்வரனின் அம்மா கஸ்தூரியிடம் பேசினோம். “பெத்த குழந்தை கஷ்டப்படுறதை கண்ணால பார்க்க முடியலை. புள்ளைக்கு என்ன ஆகுமோ. ஏது ஆகுமோன்னு பயந்துக்கிட்டே ஒவ்வொரு நாளும் வாழ்ந்துக்கிட்டு வர்றோம். என் வீட்டுக்காரருக்கும் இதயத்துல பிராப்ளம்.

தினக்கூலிக்கு போற எங்களால, லட்ச ரூபா கொடுத்து மருத்துவம் பார்க்க முடியலை. கடைசியா அந்தக் கடவுளைத்தான் நம்பியிருக்கேன். என் புள்ளையை கைவிட்ராத கடவுளேன்னு தினமும் கடவுளை வேண்டிக்கிட்டு வர்றேன்” என தேம்பினார்.