Adirai pirai
islam இந்தியா

டாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

இஸ்லாமிய மதபோதரான ஜாகிர் நாயக் மீது பொய்யான அவதூறுகளை பரப்பி அவரை தீவிரவாதியை போல் மத்திய அரசு சித்தரித்து வருகிறது. இதனால் அவர் வெளிநாடுகளில் தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்த சர்வதேச குற்றவியல் போலீசான இண்டெர்போல், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப முடியாது என தெரிவித்தது.

ஜாகிர் நாயக் மீது இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்த குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் போலீஸ் ஆய்வு செய்ததில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் தெளிவு இல்லை என்றும் அதனை ஆய்வு செய்து உறுதி செய்ததை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதனிடையே, அமலாக்கத் துறை மற்றும் தேசியப் புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் விசாரணை அறிக்கையின் நகலை தனக்கு அளிக்க வேண்டும் என்று ஜாகிர் நாயக் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.எம்.சாவந்த், ரேவதி மோஹதி தேரே ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மலேசியாவில் இருக்கும் அவரை, இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, மலேசிய அதிகாரிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. தனது பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஜாகிர் நாயக் கோரிக்கை விடுத்துள்ளார். அதுதொடர்பாக, அவர் தனியாக வேறொரு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். பாஸ்போர்ட் மீதான தடையை நீக்குவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.