Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்!

சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு மக்கள் தங்கள் தேவைகளுக்காக குரல் கொடுப்பது அதிகரித்து வருகிறது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துவதை பலர் செய்து வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு நல்ல தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்கவும் மறக்கவும் முடியாது.

எந்த ஒரு விசயத்திலும் நன்மைக்கு இணையாக தீமையும் இருப்பது போல், இதிலும் பல்வேறு தீய செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதில் முக்கியமானது தான் வதந்தி. தீயை விட வேகமாக பரவக்கூடியது இந்த வதந்தீ. இதனால் அதிரையில் தொடர்ந்து குழப்பங்கள் உருவாகி வருவது வாடிக்கையாகி வருகிறது. அதிரையில் எந்த நிகழ்வுகள் நடந்தாலும் அதனை வெளியிட இணையதளங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆராய்ந்து உண்மை தண்மை மாறாமல், ஊரின் அமைதி கெடாத வகையில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இவற்றையும் மீறி சில தளங்களில் தவறான செய்திகள் வெளிவருவது வாடிக்கை தான். அப்படி வந்தாலும், சம்பந்தப்பட்ட தளத்தை தொடர்பு கொண்டு மக்களால் விளக்கம் கேட்க முடியும். மாற்றுக்கருத்தை முன் வைக்க முடியும், தீர்வு காணமுடியும்.

ஆனால், அதிரையில் கடந்த இரண்டு நாட்களாக பரவி வரும் இரண்டு வதந்திகளால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு தனியார் பள்ளியின் மீதான புகார் பதிவு ரியாஸ் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் வைரலாகி அந்த பள்ளிக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் வருகிறது. ஆனால், அது குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களிடம் நாம் விசாரித்ததில், அந்த பதிவில் குறிப்பிடப்பட்ட நேரம் உட்பட பல விசயங்களில் மிகைப்படுத்தப்பட்டு கூறப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த ரியாஸ் என்ற நபர் யார் என மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடம் விளக்கம் கேட்க முடியவில்லை.

அது போல், அதிரையை சேர்ந்த ஒரு வீட்டுக்குள் 40 பேர் கொண்டு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து பெண்களையும் குழந்தைகளையும் தாக்கியதாக படங்களுடன் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் அந்த தெரு முஹல்லா நிர்வாகிகளிடம் விசாரித்த போது, அது குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட தாக்குதல் என்றும், வெளியாட்கள் யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது. ஆனால், அப்பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளால் அது மக்கள் மனதில் தவறாக பதிந்து ஊரில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

இதை பதிபவர்கள் மேல் தவறு ஒரு புறம் இருந்தாலும், எந்த சிந்தனையும் இல்லாமல் அதனை அப்படியே பகிர்பவர்களே இந்த பொய் பிரச்சாரங்களுக்கு மேலும் பழு சேர்க்கின்றனர். இது போன்ற வதந்திகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட பதிவுகளால் ஊரில் நடக்கும் மற்ற முக்கிய பிரச்சனைகளையும் மக்கள் சதேகத்துடன் எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதே உண்மை.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி