Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்?

கேப்டவுன்… தென்னாபிரிக்காவின் பாராளுமன்ற தலைநகரம். அந்நாட்டின் வளர்ச்சியடைந்த தொழில் நகரம். கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று பரீட்சையமான பெயர் இந்த கேப்டவுன். தென்னாபிரிக்காவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செல்லும் போது இந்த நகரில் ஒரு போட்டியாவது நடைபெறும். ஆனால், இந்த நகரம் மற்றுமொரு சோகமான சாதனையையும் பெற்றுள்ளது. ஆம், ஒரு சொட்டுத் நிலத்தடி நீர் கூட இல்லாத உலகின் முதல் நகரம் கேப்டவுன். எந்த ஒரு பகுதிக்கும் ஏற்படக்கூடாத மிகமோசமான நிலை இது.

அதிரையை ஏன் அடுத்த கேப்டவுன்? என நாம் கூறுகிறோம் என்பது இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆம், அதிரையில் நிலத்தடி நீர் படுவேகமாக சரிந்து வருகிறது. தண்ணீர் தேவைக்காக பொதுமக்கள் போர் போடுவது ஒரு பக்கம் அவசியமான ஒன்றாக மாறிவிட்டாலும், மறுபக்கம் தனியார் நிறுவனங்கள் தங்கள் சுய லாபத்துக்காக ராட்சத போர்களின் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி குடிப்பது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதிரையின் நீர் ஆதாரங்களாக விளங்கும் குளங்கள், வாய்க்கால்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கின்றன. இதனால் ஊரும் வெப்பமயமாகி வருகிறது. இந்த சூழலில் அதிரையில் கடந்த சில மாதங்களாக பேரூராட்சியின் தண்ணீர் விநியோகமும் பெரும் அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பொது குடிநீர் விநியோகத்துக்காக பேரூராட்சி சார்பில் போடப்பட்டுள்ள 18 போர்களிலும் நிலத்தடி நீர் மட்டம் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக சரிந்துள்ளதாலேயே, குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக மேலும் 4 போர்கள் போட உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குடிநீருக்காக பேரூராட்சி விநியோகிக்கும் தண்ணீரை பொதுமக்கள் வீட்டு உபயோக தேவைக்காகவும், கட்டுமான பணிகளுக்காகவும், தொழில்களுக்கும், தோப்புகளுக்கும் பயன்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணம் என பேரூராட்சி தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

தண்ணீர் என்பது இறைவன் நமக்கு வழங்கிய மிக முக்கியமான செல்வம். இது நமக்கும் மட்டும் சொந்தமானது அல்ல. நமது எதிர்கால சந்ததிக்கும், வாயில்லா பிராணிகளுக்கும், மரம், செடி, கொடிகளுக்கும் இதில் உரிமை உள்ளது. ஆனால், இந்த தலைமுறையை சேர்ந்த மனிதர்களாகிய நாம், தண்ணீருக்கு நாம் தான் முழு உரிமையாளர்கள் என நினைத்து அதனை வீணடித்து வருகிறோம். இதனை தேவைக்கு மட்டும் சிக்கனமாக பயன்படுத்தி அதிரையை அடுத்த கேப்டவுனாகவிடாமல் பாதுகாப்போம்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy