Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரையர்களே… கால்பந்தின் மூலம் கரம் கோர்ப்போம்!

அதிராம்பட்டினம்… தஞ்சை மாவட்டத்தின் சிறிதளவிலான கடல் பகுதியை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள அழகான ஊர். இங்குள்ள கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், தமிழ், ஆங்கிலம், கணிதம், மார்க்கப்பணி, சமூக சேவை, ஊடகப்பணி, அரசியல், விளையாட்டு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

குறிப்பாக விளையாட்டை பொருத்தவரை ஏராளமான மைதானங்களில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து உள்ளிட்ட் பல்வேறு போட்டிகளில் அதிரையர்கள் பெயர் சொல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளிகளுக்குள் நடத்தப்படும் தடகளப்போட்டிகளிலும் அதிரை மாணவர்கள் மாநில அளவிலான சாதனைகளை படைத்துள்ளனர். இப்படி என்னற்ற விளையாட்டு திறமைகளை கொண்டுள்ள நமதூரின் மிகப்பெரிய சாபக்கேடாக விளங்குகிறது ஒற்றுமையின்மை.

ஆம், ஆண்டு தோறும் அதிரையின் முக்கியமான கால்பந்து அணிகளால், மிகப்பெரிய கால்பந்தாட்ட தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழக அளவில் தலைசிறந்த பல்வேறு கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்த நாட்களில் அஸர் முதல் மக்ரிப் வரை அதிரை மக்களின் முக்கிய பொழுதுபோக்காக கால்பந்து விளையாட்டு அமைந்துவிடுகிறது.

இது ஒரு வித உற்சாகத்தை கொடுத்தாலும், மறு பக்கம் அதிரையர்களை ஒருவித பயமும் தொற்றிக்கொண்டுள்ளது. ஆம், அதிரையின் கால்பந்து அணிகள், ரசிகர்களுக்கு இடையிலான மோதல் தான் அது. கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் இவற்றை விரும்புவது இல்லை என்றாலும், கூட்டத்திற்குள் ரசிகர்கள் போல் நுழையும் சில விரோதிகள் மோதலை தூண்டிவிட்டு செல்கின்றனர். அந்த தீப்பொறி பின்னர் மிகப்பெரிய தீக்குழம்பாக உருவெடுத்து, நமக்குள் பகைமையை வார்த்தெடுத்து தெரு மோதலாகி விடுகிறது. ஆண்டு முழுவதும் ஒற்றுமையுடன் இருக்கும் நமதூர் மக்கள் இந்த போட்டிகளால் நிலப்பரப்பு ரீதியாக பிரிந்து விடுகின்றனர். பேஸ்புக், வாட்ஸ் அப் வந்த பிறகு அதனை எப்படி பயன்படுத்துவது என தெரியாமல், தங்களுக்கு பிடித்த அணிக்கு ஆதரவாக இரு தரப்பினரும் பதிவிட்டுகொள்வது, நமக்கிடையிலான மோதலை மேலும் அதிகரித்துவிடுகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காகவும், பார்ப்பதற்காகவும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் நமதூருக்குள் நடக்கும் இந்த சண்டையை பற்றி கேவலமாக பேசிக்கொள்கின்றனர்.

இது தேவை தானா? ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய மார்க்கத்தை பின்பற்றிக்கொண்டு ஒரு சாதாரண விளையாட்டுக்காக சண்டையிட்டு கொள்வதை இறைவன் விரும்புகிறானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இதில் யார் மீது தவறு என்பதை பேசுவதற்கு நாம் இந்த கட்டுரையை எழுதவில்லை. மேலே உள்ள கேள்விகளை உங்களுக்குள் ஆழமாக எழுப்பிக்கொண்டால், நம் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் இந்த தவறை செய்கிறோம் என்பது புரியும்.

எனவே இனி வரும் காலங்களில் அதிரையில் எந்த அணி கால்பந்து தொடரை நடத்தினாலும், அனைத்து தெருவினரும் தங்கள் அணியின் கால்பந்து தொடரை போல் ஒன்றாக சேர்ந்து நடத்த உதவினால் நமதூரின் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். எந்த கால்பந்தாட்ட போட்டி நமக்கிடையே மோதல் போக்கை உருவாக்கியதோ அதே கால்பந்தாட்ட போட்டியின் மூலம் நமது சகோதரத்துவத்தை எதிரிகளுக்கு காட்டுவோம்.

அதிரையின் விளையாட்டு வீரர்கள் மைதானங்களினாலேயே பிரிந்துள்ளனரே தவிர மனங்களினால் அல்ல என்பதை உணர்த்துவோம்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி