Adirai pirai
INFORMATION இந்தியா

இனி மொபைல் அப்லிகேஷன் மூலம் ஈசியாக பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கலாம்

வெளிநாடு செல்லும் மக்கள் பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால் நிறைய சிரமங்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்நிலையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் பதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த பாஸ்போர்ட் சேவை தின நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாட்டின் எந்தவொரு மூலையிலும் இருந்தும் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பெறும் வகையிலும், மொபைல் போன் மூல‌ம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கும் வகையிலும், ‘பாஸ்போர்ட் சேவா’  என்ற புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

காவல்துறை சரிபார்ப்பு மற்றும் பாஸ்போர்ட் போன்றவை செயலியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விவாகரத்தான பெண்களோ/ ஆண்களோ பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது திருமணச் சான்றிதழ் மற்றும் முன்னாள் கணவரின் பெயரை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அறிவிப்பையும் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் பாஸ்போர்ட் புரட்சி ஏற்பட்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்த சுஷ்மா ஸ்‌வராஜ், தற்போது நாடு முழுவதும் 251 பாஸ்போர்ட் பதிவு மையங்களை திறப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். அதில் 212 மையங்கள் நிறுவப்பட்டு விட்டதாகவும், எதிர்காலத்தில் அனைத்து மக்களவை தொகுதியிலும் பாஸ்போர்ட் பதிவு மையங்கள் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.