Adirai pirai
exclusive video உள்ளூர் செய்திகள்

அதிரையில் “65 வயது எடிசன்” முஹம்மது அன்சாரியை தெரியுமா உங்களுக்கு?

அதிரை சிஎம்பி லேனை சேர்ந்தவர் முஹம்மது அன்சாரி. 65 வயதான இவர் தற்போது சென்னையில் தங்கி வருகிறார். B.Sc கணிதம் படித்துள்ள இவர் படிப்பிற்கு அப்பாற்பட்டு எலெக்டிரானிக்ஸ் துறையில் ஆர்வமாக இருந்து வருகிறார். தன்னுடைய 14 வயதில் எலெக்டிரானிக்ஸ் மீது ஈர்ப்பு கொண்ட இவர் அப்போதே சிறிய அளவிலான ரேடியோ நிலையத்தை உருவாக்கி இருக்கிறார். அதிரையில் உள்ள தன்னுடைய வீட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே சூரிய ஒளி சக்தி மற்றும் காற்றின் மூலம் மின் உற்பத்தி செய்து அதனை பயன்படுத்தி இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். துபாயில் இவர் வேலை பார்த்த போது சிறிய ரக சோலார் காரை தயாரித்து அரபிகளின் பாராட்டை பெற்றுள்ளார்.

இப்படி பல்வேறு எலெக்டிரானிக் பொருட்களை தயாரிப்பதை இவ்வளவு ஆண்டுகளாக ஒரு பொழுதுபோக்கை போல் அவர் செய்து வருகிறார். தற்கால கருவிகள், தொழில்நுட்பங்களுக்கு ஏற்றார் போல் தன்னை தரம் உயர்த்தியும் வருகிறார் அன்சாரி.

இந்த சூழலில் தான் இவர் ஒரு ஆட்டோமேடிக்காக முட்டை குஞ்சு பொறிக்கும் கருவியை உருவாக்கி அதில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த கருவி மூலம் ஒரு தவணையில் 50 முட்டைகளில் குஞ்சு பொறிக்க வைக்க முடியும் என்கிறார் அன்சாரி. அந்த கருவியின் மேல் பொருத்தப்பட்டுள்ள LCD திரையில் அந்த கருவியின் வெப்பத்தை பயன்பாட்டாளர்கள் அறிந்துகொள்ள முடியும்.

கருவி 21 நாட்களுக்கு இன்குபேட்டரை 38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்திருக்கிறது. அத்துடன் 180 டிகிரி அளவுக்கு முட்டைகள் உருட்டப்படுகின்றன. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால், அதில் பொறுத்தப்பட்டுள்ள பேட்டரில் சேமிக்கப்பட்ட மின்சாரம் மூலம் கருவி இயங்கும் வகையில் வசதிகளை வைத்துள்ளார் அன்சாரி. இந்த கருவியை யார் வேண்டுமானாலும் எளிதில் நேர விரயமின்றி பயன்படுத்தலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

அதன் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்படி பல பிரம்மிக்க வைக்கும் விசயங்களை செய்துள்ள முஹம்மது அன்சாரியின் திறமை இத்தனை ஆண்டுகளாக அதிரையர்களால் அறியப்படாத நிலையிலேயே உள்ளது. இதனை பொதுவெளிக்கு கொண்டு வந்து அன்சாரி போன்ற உள்ளூர் விஞ்ஞானிகளின் புகழை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அதிரை பிறையின் நோக்கம்.

இதுபோன்று உங்களுக்கு தெரிந்து வெளி உலகிற்கு தெரியாத திறமைசாளிகள் அதிரையில் இருந்தால், கீழ்காணும் நமது எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வையுங்கள்.

9597773359

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி