Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

வெளிநாடு வாழ் அதிரை மக்களுக்குள் பிரச்சனையா? நடப்பது என்ன?

அதிராம்பட்டினத்தின் பெரும்பாலான குடும்பங்களின் பொருளாதாரத் தேவை ஆண்களின் வெளிநாட்டு சம்பாத்தியம் மூலம் தான் பூர்த்தியடைகிறது. ஒரு காலத்தில் சவூதி, துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலேயே அதிரையர்கள் அதிகம் பொருளீட்ட தொடங்கினர். காலம் செல்ல செல்ல அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நார்வே, இதர வளைகுடா நாடுகளில் அதிரையர்கள் பொருளீட்டி வருகின்றனர். தற்போது அதிரையர்கள் இல்லாத நாடுகளே இல்லை என சொல்லும் அளவுக்கு குட்டி குட்டி நாடுகளில் கூட யாராவது ஒருவர் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு காலம் காலமாக அதிரையர்கள் வெளிநாடுகளில் பொருளீட்டுவதற்கு முக்கிய காரணம், ஊரில் கஷ்டப்படும் உறவுகள், நண்பர்களுக்கு வெளிநாடுகளில் இருப்பவர்கள் விசா எடுத்துக்கொடுத்து வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வரை அரையில் தங்க வைத்து உபசரிப்பது தான். பல நாடுகளிலும் இதனை பலர் ஒரு சேவையாகவே செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வேலைத்தேடிக்கொண்டு அரையில் தங்கி இருப்பவர்களை உதாசீனப்படுத்துவதும் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இவ்விரண்டு துருவங்களையுமே வெளிநாடுகளில் தங்கி இருக்கும் அதிரையர்கள் பாத்திருப்பார்கள். அரையில் தங்கி இருப்பவர்களுக்கு சிறிய சிறிய சண்டை சச்சரவுகள் வருவதும் சகஜம் தான். அதை அவர்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்சனை தீராவிட்டால் அரையின் மற்ற உறுப்பினர்களுக்குள் கலந்து பேசியோ அல்லது அந்தந்த நாடுகள் இயங்கி வரும் அதிரை முஹல்லா கிளைகளின் உதவியுடனோ தீர்க்க முயற்சிக்கலாம். இது தான் சரியான அனுகுமுறையும் கூட…

ஆனால், தற்போது ஒருநாட்டில் ஒரு அரையில் வசித்த சிலருக்குள் ஏற்பட்ட பிரச்சனை அதிரை மீடியா ஒன்றிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது. ஊடகம் என்பது இரு தனிநபர்களுக்கு இடையிலான பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்யக்கூடிய களம் இல்லை. அதற்கென அதிரையில் தெருவாரியாக முஹல்லாக்கள் செயல்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், தவறு செய்தவர்களுக்கு தண்டனையும் வழங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றக்கருத்தும் இல்லை. ஆனால் இப்படி ஊரிலும், வெளிநாட்டிலும் இருவருக்குள் நடக்கும் பிரச்சனைகளைகளை எல்லாம் பொதுத்தளத்திலோ, சமூக வலைதளங்களிலோ வெளியிட்டால் சாக்கடையைவிட இணையதளம் நாரத்தொடங்கிவிடும். சமூக பிரச்சனைகளுக்கு தொடங்கப்பட்ட மீடியாக்கள் தனிநபர் பிரச்சனைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகும்.ஊரில் நிலவும் மக்கள் நலன் சார்ந்த முக்கிய பிரச்சனைகள், நாட்டு நடப்புகள், நல்ல கருத்துக்களை உள்ளூர் ஊடகங்கள், பேஸ்புக் பதிவாளர்கள் எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். ஆனால், அதை விடுத்து முதிர்ச்சியின்றி இருவருக்குள் உள்ள பிரச்சனையை ஒரு தரப்பில் மட்டும் விசாரித்துவிட்டு இணையதளத்திலும், சமூக வலைதளத்திலும் வெளியிட்டு குழப்பம் விளைவிப்பதில் எந்த விதமான பயனும் இல்லை. இதன் மூலம் கணவனை, மகனை, சகோதரனை பிரிந்து ஊரில் இருக்கும் தாய்மார்களுக்கு பதற்றமும், பயமும், குழப்பமும் தான் ஏற்படும்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி