Adiraipirai.in
articles உள்ளூர் செய்திகள் தமிழகம்

8 வழிச்சாலை – தஞ்சை மாவட்ட மக்களுக்கு ஆபத்தா?

சென்னை-சேலம் பசுமை  8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு 8 வழிச்சாலை அமைக்க திட்டம் உள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். சென்னை-சேலம் 8 வழிச்சாலையை அடுத்து மதுரை – தஞ்சாவூர் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்’ என்றும் கூறினார்.

ஏற்கனவே மதுரை -தஞ்சை இடையே திருச்சி மார்க்கமாக ஒரு வழியும், புதுக்கோட்டை மார்க்கமாக மற்றொரு வழியும் உள்ளது. திருச்சி, விராலிமலை வழியிலான வழியாக 3 மணி நேரம் 10 நிமிடங்களில் மதுரையை சென்றடையலாம். அதுபோல், புதுக்கோட்டை வழியாக சென்றால், 3 மணி நேரம் 30 நிமிடங்களில் சென்றடையலாம். இவ்விரு மாவட்ட மக்கள் 8 வழி சாலை கோரிக்கையை இதுவரை வைத்ததாக தெரியவில்ல. அரசு இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்துமா? அல்லது புதிய வழியை தேர்ந்தெடுத்து கிராமங்களையும், விளைநிலங்களையும் அழித்து சாலை அமைக்குமா என தெரிவில்லை.

திருச்சி, மதுரை இடையே விராலிமலை அருகே நிறைய மலைகள் உள்ளன. சேலத்தை போல் இந்த மலைகளை வெட்டி எடுப்பதற்காக இந்த சாலை அமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே காவிரியில் நீர் வராததால் தஞ்சை விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ள நிலையில், இந்த 8 வழிச்சாலை திட்ட அறிவிப்பு அவர்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீத்தேன்பிரச்சனையால் விவசாய நிலங்கள் பரிபோய் விடுமோ என்ற பீதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும் இதனால் மேலும் சோகமடைந்துள்ளனர். இங்கு மேலும் ஒரு சந்தேகம் எழுகிறது. அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சேலத்திலும், தஞ்சையிலும் விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. தற்போது, சேலத்தில் விமான சேவை தொடங்கியுள்ளது. தஞ்சையிலும் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் அதே இரண்டு நகரங்களை சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களுடன் 8 வழிச்சாலை மூலம் இணைப்பதற்கான உள்நோக்கம் என்ன என்பது இங்கு எழும் மில்லியன் டாலர் கேள்வி.

இதற்கான வழித்தடத்தை அரசு அறிவித்த பிறகே மக்களின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தெரியவரும்.

அலசல்: நூருல் இப்னு ஜஹபர் அலி