Adiraipirai.in
articles islam உள்ளூர் செய்திகள்

அதிரை பெற்றோர்களே! மார்க்கை விட மார்க்கம் முக்கியம்

அதிரையில் காதிர் முஹைதீன் பள்ளி, இமாம் ஷாபி பள்ளி ஆகியவை பல ஆண்டுகளாக கல்வி சேவையை ஆற்றி வருகின்றன. இதே போல், ஏ.எல் பள்ளி, ஈ.பி.எம்.எஸ் பள்ளி, வெஸ்டர்ன் பள்ளி ஆகியவையும் குறிப்பிட்ட வகுப்புகளுக்கான கல்வி சேவையை செய்து வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக அரசு பள்ளிகளிலும் கணிசமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். காதிர் முஹைதீன், இமாம் ஷாபி, ஏ.எல், ஈ.பி.எம்.எஸ், வெஸ்டர்ன் ஆகிய பள்ளிகளில் உலகக்கல்வியுடன் சேர்த்து மார்க்க கல்வியும் போதிக்கப்படுகின்றது. இதன் மூலம் மார்க்கப் பற்றுள்ள, ஒழுக்கமான மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒரு காலத்தில் இப்பள்ளிகளில் கல்வி பயின்ற பலர் இன்று மருத்துவம், பொறியியல், கல்வி, அறிவியல், அரசுப்பணி, ஊடகத்துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

மார்க்கக் கல்வியுடன் கூடிய இப்பள்ளிகளின் கல்வி சேவை காரணமாகவே இன்றைய அதிரையின் இளைய சமுதாயம் சமூக அக்கரையுடன் பல்வேறு நற்காரியங்களை செய்து வருகிறார்கள். ஊர் முழுவதும் நூற்றுக்கணக்கான ஹாஃபிழ்கள் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் தொடங்கப்படும் தனியார் பள்ளிகள் ஆசை வார்த்தைகளை கூறி அதிரையின் பெற்றோர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றார்கள்.

பெற்றோர்களும் ஆசை வார்த்தைகளை நம்பி மதிப்பெண்களுக்காகவும், கவுரவத்திற்காகவும் அந்த தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி மாணவ மாணவிகளை சேர்க்கிறார்கள். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவ மாணவிகளுக்கு மார்க்கத்தின் மீதான தொடர்பே இல்லாமல் போகிறது. 5 வேளை தொழுகை கிடைப்பதில்லை, பல மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் இவை எதையும் கண்டுக்கொள்ளாத பெற்றோர்கள் மார்க்குக்காக தங்கள் பிள்ளைகளின் மார்க்க கல்வியை புறக்கணிக்கின்றனர்.

இந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து விடுவதற்காகவே ஊருக்குள் சில புரோக்கர்கள் பொய்களை பரப்பிக்கொண்டு திரிகிறார்கள். அதிரையில் செயல்படும் பள்ளிகளின் மீது இல்லாத அவதூறுகளை சமூக வலைதளங்களின் மூலம் பரப்பி வருகிறார்கள். இதனை கேட்டு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வெளியூர்களில் சேர்த்து விடுகிறார்கள். காலை 7 மணிக்கு வேனில் ஏறும் பள்ளி குழந்தைகள் மாலை 6 மணிக்கு சக்கையாக வீடு வந்து சேர்கிறார்கள். இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதிரையை சேர்ந்த இமாம் ஷாபி பள்ளியில் 8 மணிக்கு பள்ளி திறப்பதாக பொய்யை பரப்பி அதன் மீதான மக்களின் நன்மதிப்பை சிலர் கெடுக்க முயற்சிக்கின்றனர்.

எந்த ஒருநிர்வாகமாக இருந்தாலும் அதில் குறைகள் இருக்கும், 100 சதவீத மக்களையும் திருப்தி படுத்த முடியாது. ஆனால், அந்த குறைகளை நிர்வாகத்திடம் தெரிவித்து தீர்வு காண முயற்சிக்காமல் சமூக தளங்களில் பரப்புவது காழ்ப்புணர்ச்சியையும், வியாபார தந்திரத்தையுமே காட்டுகிறது. இதைவிட பல மடங்கு குறைகள், உள்ளூர் புரோக்கர்களால் பரிந்துரை செய்யப்படும் வெளியூர் பள்ளிகளிலும் இருக்கும். அங்கு இதை விட பள்ளிக்கட்டணம் அதிகமாக இருக்கும். நிர்வாகத்தை பெற்றோர்கள் உடனடியாக பார்க்க முடியாது. அலைக்கழிக்கப் படுவார்கள். 5 வேளை தொழுகை கிடையாது. மார்க்க கல்வி கிடையாது. மாணவ மாணவிகள் பேருந்தில் சென்று வருவதால் அலைச்சல் அதிகமாக இருக்கும். விளையாடுவதற்கு கூட நேரம் இருக்காது. இப்படி பல உள்ளன.

ஆனால் இதனை எல்லாம் சொல்லாமல், தனியார் பள்ளிகளிடம் கிடைக்கும் சில ஆயிரம் அற்ப கமிசன் பணத்துக்கு ஆசைப்பட்டு உள்ளூரில் பல ஆண்டுகளாக கல்வி சேவையாற்றி வரும் காதிர் முஹைதீன், இமாம் ஷாபி பள்ளிகளின் மீது அவதூறுகளை பரப்பி மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடும் புரோக்கர்களின் செயல் கேவலத்திலும் கேவலமானது. இவர்களின் பேச்சைக்கேட்டு மயங்கி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மார்க்க கல்வியை தொலைத்து விட வேண்டாம்.

மார்க்கை விட மார்க்கம் தான் முக்கியம்

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி