Adirai pirai
islam உலகம்

மக்கா இமாம் அப்துர்ரஹ்மான் அல்-சுதைசியிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அல்-ஜீரியா நபர் (வீடியோ)

புனித ஹரம் ஷரீஃப் விவகாரங்களுக்கான தலைவரும் மக்கா இமாமுமான அஷ்ஷெய்க் அப்துல் ரஹ்மான் சுதைஸி அவர்கள் கடந்த 28 ஜுன் 2018 வியாழன் அன்று சிறப்பு விருந்தினராக ஜெனீவாவிற்கு வருகை தந்தார்.

சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பா இஸ்லாமிய மத்திய நிலையத்தின் அழைப்பின் பேரில் ஜும்மா நிகழ்த்துவதற்காகவும் அதனைத் தொடர்ந்துஇஸ்லாத்தில் பாதுகாப்பும்-நடைமுறையும் அதனை பேணிப் பாதுகாத்தலும் என்ற பொருளில் உரை நிகழ்த்துவதற்காகவுமே அவர் அங்கு வருகை தந்திருந்தார்.

மக்கா இமாம் அஷ்ஷெய்க் சுதைஸி அவர்கள் உரை நிகழ்த்திய பின்னர் அவரை நோக்கி பல கேள்விகள் தொடுக்கப்பட்டன. அதில் கத்தார் முற்றுகை, ஏமன் மீது தொடுக்கப்பட்டுள்ள போராட்டம், பொதுமக்கள் மீதான அத்துமீறல்கள் மற்றும் இது குறித்து சவுதி அரசின் நிலைப்பாடுகள் பற்றிய கேள்விக் கணைகள் பெய்யும் மழையாய் அவர் மீது பொழிந்தன.

அப்போது சபையில் பலத்த சலசலப்பும் இரைச்சலும் ஏற்பட்டது. மக்ரிப் வரை நிகழ்ச்சி நடைபெற திட்டம் இருந்தும் கூட சங்கடமான நிலை தோன்றவே மக்கா இமாம் மத்திய நிலையத்தை விட்டும் உடனே வெளியேறிவிட்டார்.

மக்கா இமாம் கலந்து சிறப்பித்த கூட்டத்தின் இறுதியில் மெரோக்கோவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் எழுந்து நின்று, இமாம் அவர்களை விழித்து: ‘எதிர்வரும் 2026 உலகக்கோப்பை நடாத்துவதற்கான சவுதியின் பூரண ஆதரவும், அணுசரனையும் அமரிக்காவு உண்டு என சவுதி பகிரங்கமாக அறிவித்தது. அத்துடன் மொரோகோவிற்கு எதிராகவும் அமரிக்கவிற்கு சார்பாகவும் சவுதி வாக்களித்தது. சவுதி அரசு ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தது அதற்கு என்ன காரணம் என அவர் கேள்வி எழுப்பினார்.

மொரோக்கோ சகோதரனை தொடர்ந்து ஆல்ஜீரிய சமூக ஆர்வலர் ஸலாஹுத்தீனின் தொடுத்த கேள்விக் கணைகள் அனல் பறக்கும் தணலாய் இமாம் அவர்களை சரமாறியாக தாக்கியவண்ணம் இருந்தன.

ஆனால் மக்கா இமாம் சுதைஸி அவர்கள் கேள்விகளுக்கு பதில் தரவில்லை. அவசரமாக அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை.

இதோ சமூக ஆர்வலர் ஸலாஹுத்தீன் அவர்கள் மக்கா இமாமிடம் முன்வைத்த ஆவேசமான கேள்விகள்:

மக்கா இமாம் அவர்களின் உரை முடிவடைகிறது. கேள்வி-பதில்களுக்கான அவகாசம் கொடுக்கப்படவில்லை. இமாம் சுதைஸி திரும்பிச் செல்கிறார்.

அப்போது சபையில் இருந்த அல்ஜீரிய நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸலாஹுத்தீன் அவர்கள் குறுக்கிடுகிறார்.

கேள்வி பதில்களுக்கான நேர அவகாசம் இலையா இமாம் அவர்களளே! என்னிடம் கேள்விகள் உண்டு. பதில் தரமாட்டீரோ! என ஸலாஹுத்தீன் கத்திக் கேட்கிறார்.

இமாம் அவர்களே! உலக நாடுகளின் சாமாதானத்திற்காக அமரிக்க நிர்வாகம் எப்படி தலைமை தாங்க முடியும்?

இமாம் அவர்களே! நீங்கள் எப்படி சமாதானம் பாதுகாப்பு பற்றி பேச முடியும்!? யெமனில் உங்கள் சகோதரர்களை பட்டினியில் வாட்டுகிறீர்கள். கத்தாரில் உங்கள் உடன்பிறப்புக்களை முற்றுகையிட்டு வதைக்கிறீர்கள்.

இந்நிலையில் பாதுகாப்பு பற்றி பேச உங்களுக்கு எங்கே யோக்கியதை உண்டு?

1992ல் அல்ஜீரிய புரட்சி, 2013ல் எகிப்திய சதிப்புரட்சி, 2016ல் துருக்கிய ராணுவப் புரட்சி என அத்தனை புரட்சிகளுக்கு பின்னாலும் உங்கள் மறைகரம் இருந்ததல்லவா!

இப்புரட்சிகளுக்கு நீங்கள் ஆதரவளித்து உதவினீர்கள் தானே!

உங்கள் ஆதரவோடு புரட்சிகள் யாவும் இனிதே நடந்து முடிந்தன.

நாளை மறுமையில் அல்லாஹ் முன்னிலையில் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்.

யெமன் படுகொலைக்கு பத்வா வழங்கிய இமாமே!

அமிரிக்காவின் அடிவருடியே! பாதுகாப்பு, சுதந்திரம் பற்றி உபதேசம் செய்வதற்கு எந்த முகத்துடன் இங்கு வந்தீர்கள்.

நாம் பாதுகாப்பு சுதந்திரம் நிறைந்த இந்த பூமியில் வாழுகிறறோம். நீங்கள் சர்வாதிகளின் செருப்பாய் இழிந்து போயுள்ளீர்கள். உங்கள் பேச்சை எவன் கேட்பான்? நாசாமாகிப் போங்கள்!

அல்லாவின் சாபம் மறுமை மட்டும் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும்.

சதிப் புரட்சிகளின் போது சிந்திய ரத்தங்களுக்காக நீங்கள் பதில் சொல்ல காத்திருங்கள்.

நான் ஒரு இக்வான் அல்ல. ஆனால் எல்லா முஸ்லிம்களும் எனது இக்வான்களே!

இந்தக் கேள்விக் கணைகள் தான் அப்துல் ரஹ்மான் சுதைஸியை சங்கடத்தில் ஆழ்த்தியது.

இந்தப் பதிவில் ஆவேசப்பட்டு கத்தும் அந்த சமூகார்வலரை யாரும் திட்டவில்லை. அவரை அமைதிப்படுத்த முயற்சித்தார்களே தவிர அவரை கண்டித்து அல்லது பிடித்து அடித்து கட்டி பெலிஸுக்கு பாரம் கொடுக்கவில்லை.

உண்மையில் அவர் எதை பேசினாரோ அவை அனைவரும் சொல்ல விரும்பியவைதான். எல்லோரது உள்ளங்களிலும் மௌனித்துப்பபோன வார்த்தைகளை அவர் தைரியாமாக பேசினார். ஆனால் ஆவேசப்பட்டு கத்தினார். எனவேதான் யாரும் அவரை நிந்திக்காமல் ஆவேசத்தை தனிப்பதற்கு முயற்சிப்பதை காணமுடிகிறது.

மக்கா இமாம் அப்துல் ரகுமான் சுதைஸியின் அண்மைக்கால நிலைப்பாடுகளும் அறிக்கைகளும் அதற்கெதிரான மக்கள் குரல்களும் அததையொத்த தலைமை பதவிகளில் இருப்பவர்களுக்கு எதிரான மக்கள் குரல்களுகளும் எமக்கு நல்லதொரு பாடத்தை அறுதயிட்டு கூறுகிறது. அது என்ன பாடம்?! என்பதை சிந்திப்பதே எமது குறிக்கோளாகும்.

அஷ்ஷெய்க் அப்துல் ரகுமான் சுதைஸி அவர்கள் கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வரும் அறிக்கைள் மக்கள் கோபத்தையும், அவருக்கு எதிரான கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

சவுதியின் அரச குடும்பத்திற்கு மிகுந்த விசுவாசத்தை காட்டும் மக்கா இமாம் அவர்கள் 2013ல் ஹரம் ஷரீபில் ஆற்றிய குத்பா பிரசங்கம் குறித்து அகில இந்திய உலமா சபை பிரதிநிதியான அறிஞர் அஷ்ஷெய்க் ஸல்மான் நத்வி அவர்கள் கடுமையான தொணியில் கண்டித்து விமர்சனம் செய்திருந்தார். காரணம் அவரது உரை எகிப்தின் ராணுவ புரட்சியை ஆதரிப்பதாக அமைந்தது.

மீண்டும் 2017ம் ஆண்டில் அமரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலகை சமாதானத்தின் பால் வழிநடாத்த பொறுத்தமான தலைவர் என புகழ்பாடி அறிக்கை விட்ட போது ஆயிரக்கானண இஸ்லாமிய ஆர்வலர்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

கடந்த பல வருடங்களாக மக்காவின் இமாமான அஷ்ஷெய்க் அப்துல் ரகுமான் சுதைஸி அவர்கள் சவுதியின் நிலைப்பாடுகள் குறித்து விரும்பியோ விரும்பாமலோ அல்லது அழுத்தங்கள் காரணமாகவோ கருத்துக்களை வெளிப்படுத்தும் போது மக்கள் கடும் விசனப்படுகின்றனர்.

மக்கள் வெளிப்படை வார்த்தைகளைத்தான் பார்ப்பர். உள்ளத்தின் எண்ணங்கள் குறித்து அல்லாஹ் ஒருவன் மட்டுமே அதிகாரம் உள்ளவன். எனவே வெளிவார்த்தைகளை வைத்து மனிதர்கள் முன்வைக்கும் மதிப்பீடுகள் பிழையல்ல.

தனது இனிமையான குரல்வளத்தால் உலக முஸ்லிம்களின் உள்ளங்களை ஆகர்சிக்கும் மக்கா இமாம் அவர்கள் தன்னை சூழவுள்ள அதிகார வர்க்கம் சார்ந்தவர்களின் கொள்கைகளை தனது நிலைப்பாடாகவோ அல்லது அதிகார வர்க்கத்தின் நிலைப்பாடகவோ வெளியிடும் போது மக்கள் கொள்கையின் நீதி, நேர்மை, தர்மம், வாய்மை என்பவற்றைத்தான் பார்ப்பார்கள்.

அடக்குமுறையின் நிழலில் வாழும் போது அநீதிக்கு எதிராக மக்கள் வாய்மூடி இருப்பதால் இமாமின் எல்லா நிலைப்பாடுகளும் சரியானது என்றோ அல்லது அவரின் கூற்றுக்களை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்றோ நம்புவது பிழையான மதிப்பீடாகும்.

நேரம் வரும்போது மௌனித்த மக்கள் பேசுவார்கள். அந்த உண்மையைத் தான் சுதைஸியின் சபையில் நாம் காணமுடிகிறது.

அநீதிக்கு எதிரான மக்கள் நாட்டம் என்பது மிகப் பலமான சக்தியாகும். மக்கள் நாட்டம் ஒரு நாள் வெடிக்கும் போது தலைமைகள் தாங்காது என்ற உண்மையைத்தான் மக்கா இமாமுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழும் காட்சிகள் கற்றுத்தரும் முக்கிய பாடமாகும்.

மக்கள் விசனத்தை தூண்டும் நிலைப்பாடுகளை அறிக்கைகளாக வெளியிட்டு விட்டு என்றோ ஒரு நாள் மக்கள் நாட்டம் எரிமலையாக பொங்கிவரும்போது ஆசானுக்கு எதிராக கிளம்பாதே பொறுத்துவிடு என மாணவமக்களை தாழ்போட முடியாது.

காரணம் அது இறைவனால் வகுக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தின் உலக நியதியாகும். இறைநியதிகள் மாறுவதில்லை.

இந்நிலையில் தலைமைகள் தான் மாற்றம் நோக்கி நகர வேண்டுமே தவிர இறை நியதியான மக்கள் நாட்டத்தின் வெளிப்பாடுகள் அல்ல.

எனவே சமூகத் தலைமைகள் இறை நியதிகளின் வெளிப்பாட்டை கண்டு பட்டு திருந்துவதற்கு முன்பே நீதி, நேர்மை, சுதந்திரம், சமூக நலன்கள், சுதந்திரம் என்பவற்றை முதன்மைபடுத்தி காலம், இடம் அறிந்து கொள்கை சார் நிலைப்பாடுகளை வெளியிடவேண்டும் என்ற உண்மையை இந்த நிகழ்வுகள் எமக்கு கற்பிக்கின்றன.

வரமுன் காப்பபோன் சிறந்தவன். வந்தபின் பட்டுத் தெரிவதும் நல்லது. நாலும் நடந்த பிறகும் பாடமே பெறவிட்டால் அழிவுதான் இறுதியாக அமையும்.

பதிவு: முஹம்மத் பகீஹுத்தீன்

வீடியோ: Aljazeera

https://youtu.be/Eb-ggjmqNcM

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy