Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரை மக்களே… கடன் வாங்கி தான் சீர் செய்ய வேண்டுமா?

அதிரையில் நடைபெறும் புதுமனை புகுவிழா, குழந்தை பிறந்தல், சுன்னத் ஹத்னா, காது குத்து, திருமண நிகழ்வு போன்றவற்றுக்கு குடும்பம் மற்றும் நட்பு வட்டங்களால் சீர் செய்யப்படுவதை காண்கின்றோம். பொருளாதாரம் உள்ளவர்கள் வசதிக்கு ஏற்ப ஆட்களுக்கு தகுந்தவாறு சீர் செய்வதை பார்த்து, தன் குடும்பச் செலவீனங்களுக்கு கூட போதிய பொருளாதாரம் இல்லாதவர்களும் வரட்டு கவுரவத்தினால் கடன்பட்டு சீர் செய்கின்றனர்.

அன்பளிப்புகளை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால், அதிரையில் அன்பளிப்புகள் என்பது கட்டாயமாக்கப்படுகிறதோ? என்ற கேள்வி இங்கு எழுகிறது. எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அன்பை மட்டும் எதிர்பார்த்து செய்வது தான் அன்பளிப்பு. ஆனால், இங்கு வழங்கப்படும் பெரும்பாலான அன்பளிப்புகள் எதிர்பார்ப்புகளோடு வழங்கப்படுகின்றன. ஒரு வேளை தான் அன்பளிப்பு வழங்கிய நபர், தனது வீட்டு விஷேசத்துக்கு அன்பளிப்பு வழங்காவிட்டாலோ, அல்லது தான் வழங்கியதை விட குறைந்த செலவிலான அன்பளிப்புகளை வழங்கினாலோ, மற்றவரிடம் குறைப்பட்டு கொள்கிறோம்.

இந்த விசயம் வெளியில் கசிந்து உறவுகள், நண்பர்களுக்கு இடையே விரிசல் ஏற்படுவதும் உண்டு. (அன்பு + அளிப்பு = அன்பளிப்பு) நமது அன்பை ஒருவரிடம் வழங்குவதற்கு அடையாளமாகத்தான் அந்த பொருள் இருக்க வேண்டும். ஆனால், அந்த பொருட்களுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து வாங்குபரின், கொடுப்பவரின் அன்பை மறந்து விடுகிறோம். அன்பளிப்புகளின் மூலம் அன்பை வளர்க்காமல் வெறுப்பை சம்பாதித்து வருகிறோம்.

அயல் நாட்டிலோ, வெளி ஊரிலோ, அல்லது உள்ளூரிலோ கணவன்கள் ஈட்டும் பொருளாதாரத்தை தேவையில்லாத ஆடம்பர செலவுகள், சீர் செய்வதின் மூலம் பொருளாதாரத்தை சீர்குழையச் செய்து கடனாளியாக போகின்றார்கள் பெண்கள். இதனால் என்ன இருக்கிறது ஒரு சந்தோசத்தில் கொடுக்கிறது தானே என்று கூறி சிலர் கடன்பட்டு சந்தியில் நிற்க்கிறார்கள். இது போன்ற ஆடம்பர சீர்களை நிறுத்தி, கணவன் ஈட்டும் பொருளாதாரத்தை முறையான தேவைகளுக்கு பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

கருத்து: LMS அபூபக்கர்

மறு ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

பதிவுக்கு தகுந்தவாறு மேலும் சில கருத்துக்களை உட்புகுத்தி அதிரை பிறை சார்பாக வெளியிடுகிறோம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy