Adirai pirai
Real Story video உள்ளூர் செய்திகள்

உளு செய்த நீரை பயனுள்ளதாக மாற்றும் அதிரை செக்கடிப்பள்ளி (VIDEO STORY)

https://youtu.be/MScC4dlPDwQ

இஸ்லாமியர்களின் 5 கடமைகளுல் 2 வது முக்கிய கடமையாக தொழுகை உள்ளது. நாளொன்று 5 வேளைகளில் தொழுகையை நிறைவேற்றும் முஸ்லீம்கள் அதற்கு முன்பாக தண்ணீர் மூலம் கை, முகம், வாய், கால் உள்ளிட்ட உடல் அங்கங்களை சுத்தம் செய்வார்கள்.  இவ்வாறு சுத்தம் செய்யும் முறையை ஒழு என இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள். இந்த ஒழு செய்வதற்காக நாளொன்றுக்கு  ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு மிகைத்துள்ள இந்த காலக்கட்டத்தில் ஒழு செய்யும் தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தினாலோ, அல்லது நிலத்திற்கே மீண்டும் செலுத்தினாலோ நிலத்தடி நீர் தட்டுப்பாட்டிலிருந்து ஓரளவு தீர்வு கிடைக்கும்.

இந்த நிலையில் தான், கோவையை சேர்ந்த ஒரு பள்ளிவாசலில் ஒழு செய்யும் தண்ணீரை சுத்திகரித்து மரங்களுக்கு செலுத்துவது பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சியில் வீடியோ வெளியானது. கடந்த ஓராண்டாக பல வாட்ஸ் அப் குழுக்களில், இந்த வீடியோ அதிகம் பரவி வருகிறது. இது போல், நமதூர் பள்ளிவாசல்களில் செய்தால் என்ன? என்ற கேள்வியை பலர் எழுப்பினர்.இவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக சிறப்பான முயற்சியை மேற்கொண்டுள்ளனர் அதிரை சுமுக வினர். 

அதிரை பள்ளிவாசல்களில் ஒழு செய்ய பயன்படுத்தும் தண்ணீரை சேமித்து அதனை ஜல்லி, தேங்காய் நார், கரி துகள்கள் போன்ற பொருட்களை கொண்டு சுத்திகரிப்பு செய்த பிறகு தொட்டிக்கு (தரை மட்டத்தில்) செலுத்தி அதன் மூலமாக மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். 

இந்த திட்டத்தை நமதூர் செக்கடி பள்ளியில் முதன் முதலில் இவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டம் அங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி வாசலிலும் இந்த திட்டத்தினை சுமுகவினர் மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.மரம், செடிகள் அதிகளவில் உள்ள பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அப்பள்ளிகளில் இட வசதி இருக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தி கொடுக்க இயலும் எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போல், வீடுகளில் குளிப்பதற்காக பயன்படுத்தும் தண்ணீரை கழிவுகளோடு கலக்க விடாமல் தனியாக சேமிப்பது தொடர்பாக மேலும் ஒரு திட்டத்தை செயல்படுத்த இவர்கள் முயற்சித்துள்ளனர். தண்ணீரை சேமிப்பது, செலவழிப்பு குறித்து மார்க்கம் நமக்கு அதிகம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் அதிரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வீணாகும் நீரை வளமாக மாற்றுவோம்.