Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள் தமிழகம்

கனவு ஆசிரியர் விருது பெறும் முத்துப்பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வசிதம்பரம்

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களை ஊக்கப்படுத்தி, பல்வேறு சாதனைகள் புரிந்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த விருதுக்கு பள்ளிக்கல்வித் துறையினர் அனைத்துப் பகுதிகளிலும் ஆசிரியர்களை தேர்வு செய்தனர். அதன்படி, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெருவில் செயல்படும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் க. செல்வசிதம்பரம் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெறும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விருதை வழங்குகிறார். ஆசிரியர் க. செல்வசிதம்பரம், ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் “குருசேத்ரா’ விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.