Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரையில் ஹூக்கா போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் பள்ளி மாணவர்கள்!

அதிரையில் இளம் வயதினரிடம் ஹூக்கா எனப்படும் புதிய போதை பழக்கம் வேகமாக பரவி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பூட்டிக்கிடக்கும் உறவினர்கள் வீடுகளுக்குள்  தங்கள் நண்பர்களுடன் சென்று இந்த ஹூக்கா புகை போதைப்பழக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர். வகுப்பில் உள்ள ஒரு மாணவனின் மூலம் இந்த ஹூக்கா பழக்கம் மற்ற மாணவர்களுக்கும் பரவி வருகிறது. அவர்களின் மூலம் தெரு நண்பர்கள் தொடங்கி ஊரில் உள்ள ஒவ்வொரு மாணவனும் இந்த ஹூக்கா போதை பழக்கத்திற்கு அடிமையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரையை சேர்ந்த ஒரு பிரபல பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 5 பேர் ஒரு வீட்டுக்குள் இந்த ஹுக்காவை உட்கொண்டவாறு போதையில் ஆபாசமான வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்த வீடியோ வெளியானது. இதை தளத்தில் பதிந்தால் அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் வீடியோவை நாம் இங்கு பகிரவில்லை.

ஹூக்காவானது வாட்டர் பைப் கருவியின் மூலம் புகைக்கப்படுவதாகும். இந்த வாட்டர் பைப்பின் அடியில் தண்ணீர் ஊற்றப்பட்டு  அதன் மேலே புகையிலை சூடேற்றப்பட்டு நீருடன் சேர்ந்து குளிர்ச்சியான காற்றுடன் உள்ளிழுக்கப்படுகிறது. சிகரெட்டிற்கு பதில் இதனை பிடிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று பலர் தவறாக நினைத்து கொண்டு ஹூக்கா பயன்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் சிகரெட்டை விட மிகவும் கொடியது தான் இந்த ஹூக்கா. ஒரு சிகரெட்டில் இருக்கும் நிக்கோடின் அளவை விட, 200 மடங்கு அதிகமிருக்கும் ஹூக்கா போதை பழக்கம் இளைஞர்களின் வாழ்வையும், உடல்நலத்தையும் சீரழித்து வருகிறது. இதில் 70 சதவீதம் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள் அல்லது கார்சினோஜென்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சிகரெட் பிடித்தால் உள்ளுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பாதிக்கப்படும் என்றும், அதுவே ஹூக்கா பிடித்தால், விரைவிலேயே உள்ளுறுப்புகளானது பாதிக்கப்படும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக இதில் நிக்கோடின் அதிகம் கலந்திருப்பதால் இளம் வயதிலேயே நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. 

45 நிமிடம் ஹூக்காவை பிடிப்பது என்பது 50 சிகரெட்டை பிடிப்பதற்கு சமம் என்றும், ஒருவர் ஹூக்காவை விளையாட்டாக ஒருமுறை பிடிக்க ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனை உள்ளிழுக்கும் போது ஒருவித சுகத்தை அனுபவிப்பதால், அந்த சுகத்தைப் பெற அன்றாடம் ஹூக்கா பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. இது, நாளடைவில் சுவாசக் கோளாறு, மலட்டுத்தன்மை போன்றவற்றிற்கு காரணமாக அமைகிறது. இதன் பாதிப்புகளை உணர்ந்த உயர்நீதிமன்றம் அண்மையில் ஹுக்காவுக்கு தடை விதித்தது.

ஆப்பிள், லெமன் உள்ளிட்ட 250க்கும் அதிகமான ஃபிளேவர்களில் விற்பனை செய்யப்படும் இந்த ஹூக்கா போதைப்பொருளை பயன்படுத்தினால் அதனை பெற்றோர்களாலும் கண்டுபிடிக்க முடியாது என்ற காரணத்தால் மாணவர்கள் அதிகம் உட்கொள்கின்றனர். இவ்வகை போதை பழக்கத்திற்கு இளம் வயதினர் அடிமையாகாமல் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி