Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் கூடுதலாக 17 வாக்குச்சாவடிகள்

அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தப்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் அடங்கிய 2,175 வாக்குச்சாவடிகளும் அலுவலர்களால் நேரடியாக பார்வையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 2-ந் தேதி வெளியிடப்பட்டது.வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் இருந்து எழுத்து மூலம் கருத்து, ஆட்சேபனை கேட்கப்பட்டது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.கிராமப்புறத்தில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளும், நகர்புறத்தில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி பிரிக்கப்பட உள்ளது. இதில் 254 வாக்குச்சாவடிகள் உள்ள பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் 17 புதிய வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட உள்ளது. வாக்குச்சாவடிகளின் மறுசீரமைப்புக்கு பிறகு தஞ்சை மாவட்டத்தில் 112 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, 8 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 2,287 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது.