Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

தஞ்சை வந்த காவிரி… அதிரையை மகிழ்விப்பாளா?

டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக, நேற்று, கல்லணையில் இருந்து, 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்து காவிரி கிளை நதிகளுக்கு, பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், குடிமராமத்து பணி சரியாக மேற்கொள்ளப்படாததால் கடை மடை பகுதிகள் வரை வரும், பாசன வாய்க்கால்களில் புதர் மண்டி காணப்படுகிறது. குறிப்பாக அதிரை CMP வாய்காலின் நிலை நாம் அனைவரும் அறிந்ததே. ஆண்டு தோறும் தூர்வாரப்பட்டாலும், அடுத்த சில நாட்களில் அது பழை நிலைக்கு திரும்பி விடுகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்டமன்றத்தில் பேசிய பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி.சேகர், கடலில் கலக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தம் விதமாக நசுவினி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து இறைத்தல் திட்டம் (pumping scheme), CMP வாய்க்காலின் மூலம் தண்ணீர் சென்றால் 15 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கிராமங்கள் பாசன வசதி பெரும் வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்றத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.ஆனால், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதிரையில் உள்ள அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகின்றன. இந்த நிலையில், CMP வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதிரையின் அனைத்து குளங்களும் பாரபட்சம் இன்றி நிரப்பப்பட்டால், அகல பாதாளத்திற்கு சென்றுள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.ஆனால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான CMP வாய்க்கால் அகலம் சுருங்கி அதன் இயற்க்கை தன்மை இழந்து பன்னெடுங்காலமாக ஆற்று நீர் செல்லாததால் கழிவு நீர் கால்வாயை போல்காட்சியளிக்கிறது.மக்களின் அலட்சியத்தின் காரணமாகவும், ஆட்சியாளர்களின் கவனக்குறைவும் இதன் தன்மை மாறுவதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது. வீடுகளை எழில் மிகு தோற்றத்தில் கட்டுவதற்கு முயற்சிக்கும் நம்மில் பலர், வீட்டின் சுகாதாரத்தைபேணுவதில் அக்கறை காட்டுகிறார்களோ இல்லையோ சுற்றுப்புறத்தின் சுகாதாரத்தை காப்பதில் அலட்சியம் காட்டுவது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்?