Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரையர்களே… உங்கள் வீட்டுக்கு கேஸ் பழுது பார்ப்பதற்காக ஊழியர்கள் வருகிறார்களா?

அதிரையில் பாலு கேஸ் ஏஜென்சி மூலமாக அனைத்து வீடுகளுக்கு சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அதிரை காலியார் தெரு பகுதியில் கேஸ் விநியோகம் செய்த ஊழியர்கள் சிலர், பொதுமக்களிடம் ஒரு மஞ்சள் நிற நோட்டீசை கொடுத்துள்ளனர். 

அதில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டில் உள்ள கேஸ் அடுப்பு, சிலிண்டர், ரெகுலேட்டர் போன்றவற்றை சரிபார்த்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், இந்திய அரசின் பெட்ரோலிய இலாக்காவின் பரிந்துரையின் படி இந்த பரிசோதனைக்கு வாடிக்கையாளரிடம் ₹150 வாங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனை வாடிக்கையாளார்கள் படித்து முடிந்த சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்த பரிசோதனையாளர்கள், கேஸ், சிலிண்டர் முதலியவற்றை சரிபார்த்துவிட்டு சேவைக்கட்டணமான ₹150 ஐ கேட்டுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பெண்கள் வீட்டில் ஆண்கள் இல்லாததால் பணம் தரமுடியாது என்றும், சிறிது நேர பரிசோதனைக்கு 150 ரூபாய் அதிகம் எனவும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக நமக்கு வந்த புகாரின் அடிப்படையில் இது உண்மையான நோட்டீஸ் தானா? என்ற சந்தேகத்துடன் அதிரை பிறை சார்பாக பாலு கேஸ் ஏஜென்சிக்கு தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

அப்போது, அது உண்மையான நோட்டீஸ் தான் என்றும், டெலிவரி மேனுடன் வரும் சோதனையாளர்களை மட்டும் பெண்கள் வீட்டுக்குள் அனுமதிக்குமாறும் அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர். 150 ரூபாய் கட்டணம் குறித்து விசாரித்தபோது, அது அரசால் பரிந்துரைக்கப்பட்ட கட்டணம் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலான வீடுகளில்  பெண்கள் இருப்பதால், பெண் பரிசோதகர்களை இந்த பணியில் ஈடுபடுத்துமாறு நமது அதிரை பிறை சார்பாக அவர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறோம். ஏனெனில், இதனை வாய்ப்பாக பயன்படுத்தி சமூக விரோதிகளோ, திருடர்களோ, மோசடி கும்பலை சேர்ந்தவர்களோ வீடுகளுக்குள் நுழைந்துவிடக்கூடாது.

எனவே இந்த விவகாரத்தில் அதிரையை சேர்ந்த அனைத்து முஹல்லாக்களும் கேஸ் ஏஜென்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையினை வலியுறுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.